14 September 2015

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் செப்டெம்பர் 2015 பிரதான மைல்கல்!

Written by
தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் செப்டெம்பர் 2015 பிரதான மைல்கல்! படம் | DBSJeyaraj

இலங்கை மீதான ஐக்கிய நாடுகளால் நடாத்தப்பட்ட சர்வதேச விசாரணையின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. போரின்போது இரு தரப்பினராலும், போரின் பின்பு அரசாலும் இழைக்கப்பட்ட அநீதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அறிக்கை வெளியீடு ஒரு மாபெரும் வெற்றி. இருந்தாலுங்கூட, நடந்த அநியாயங்களிற்கான பொறுப்புக்கூறல் என்ற விடயத்திலே தமிழ் மக்கள் மத்தியிலே இன்று பெரும் குழப்பநிலை தோன்றியிருக்கின்றது. இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிகாரிகளான நிஷா பிஷ்வால் மற்றும் டொம் மலினொஸ்கி ஆகிய இருவரும் விடுத்திருந்த கருத்துக்களைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா தற்போது தமிழர்களைக் கைகழுவிவிட்டு, முழுமையான உள்ளூர் விசாரணைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கருதும் உணர்வலைகள் பரவலாக எழுந்துள்ளன. இந்த விஜயங்களின் பால் அமெரிக்காவின் நிலைப்பாட்டிலே மாற்றம் எற்பட்டிருப்பதாக மக்களுக்குத் தோன்றியதால் பல தமிழர்கள் சர்வதேச விசாரணையைத் தொடர்ந்தும் கோரிவருகின்றனர்.

மறுபக்கத்தில் சில தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேச மயப்படுத்தப்பட்ட உள்நாட்டுப் பொறிமுறையொன்றின் அவசியம் பற்றிப் பேசி வருகின்றனர். நான் கூட நீதி வேண்டிய பொறிமுறைகள் இலங்கைக்குள்ளானவையாக இருப்பது அத்தியாவசியம் என்று வாதித்து விளக்கியிருந்தேன். மேலும், ஏற்கனவே ஒரு சர்வதேச விசாரணை நடந்து முடிவடைந்துவிட்டதால் மீண்டுமொரு சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்பதும், நடந்து முடிந்திருக்கும் சர்வதேச விசாரணையின் பரிந்துரைகள் இலங்கை அரசாலும், சர்வதேச சமூகத்தாலும் உள்வாங்கப்பட்டு அவை இரு தரப்பாலும் அமுல்படுத்தப்படுத்துவதே இன்றைய தேவை என்ற கருத்தும் பரவலாகச் சொல்லப்படுகின்ற விடயம்.

இதனால், இன்று தமிழ் மக்களது மனங்களிலே அதிக குழப்பம் நிலவுகிறது. அடிக்கடி ஜெனீவாவுக்குச் சென்றுவந்த சட்டத்தரணிகளாலும் அரசியல்வாதிகளாலும் இணக்கப்பாட்டுக்கு வரவில்லையெனில், என்ன நடக்கிறது என்பதைப் பொது மக்களால் எப்படி முழுமையாக விளங்கிக்கொள்ளமுடியும்? ஆனாலும், வழமையான உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளால் எந்தப் பயனும் இல்லை என்ற ஒரு விடயத்தில் மக்கள் மிகத்தெளிவாக உள்ளனர். எனவே, இலங்கையின் நீதித் துறைக் கட்டமைப்பானது செயற்படும் விதத்திலே முழுமையான மாற்றம் இடம்பெறவேண்டும் என்பதுடன், நீதியை நிலை நாட்ட நிறுவப்படும் பொறிமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் சர்வதேசப் பங்களிப்பும் அவசியம் இருக்கவேண்டும். ஆனால், இந்தச் சர்வதேசப் பங்களிப்பு என்ன? நாம் பேசும் இந்தச் சர்வதேசப் பங்களிப்பு எத்தகையது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாடி நாம் கம்போடியா, சீரா லியோன் போன்ற நாடுகளைக் கருத்திற் கொள்ளலாம். அங்கெல்லாம் சர்வதேச நீதிபதிகள் உள்ளூர் நீதிபதிகளுடன் வழக்கு விசாரித்தனர். மேலும், வழக்குகள் சர்வதேசச் சட்டத்தின் பிரகாரம் விசரரிக்கப்பட்டன. மேலும், அந்த நீதிமன்றங்களிலே பங்கேற்ற சட்டத்தரணிகளுள் அரைவாசிப்பேர் வெளிநாட்டவர் மீதி உள்ளூர் சட்டத்தரணிகள். இத்தகைய சர்வதேச வகிபாகம் மாத்திரமே நிறுவப்படும் நீதிப் பொறிமுறை மீது பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

சர்வதேச விசாரணை அல்லது பொறிமுறை மாத்திரமே வேண்டும் என்று கோருவோருக்கிடையே கூட பெருத்த குழப்பம் இருக்கின்றது. சர்வதேச விசாரணை என்பதன் அர்த்தம் யாது? தற்போதைய சூழ்நிலையிலே சர்வதேச விசாரணையால் எதிர்பார்க்கப்படுவது என்ன? என்ற விடயங்களைப் பற்றிப் பேசாமல் வெறுமனே ‘சர்வதேச விசாரணை’ என்ற பதத்தினை மாத்திரம் இந்தத் தரப்பு வலிந்துரைத்து வருவதால் இவர்களிடையே நிலவும் குழப்பங்கள் வெளியிற் தெரிவதில்லை. ஜெனீவாவிலே ஏற்கெனவே இடம்பெற்றது சர்வதேச விசாரணை என்பதும் இன்னொரு முறை அதை மீளச் செய்வது அனாவசியமானது என்பதும் தெளிவு. சர்வதேச விசாரணையை மீண்டும் செய்வதல்ல, நடந்தேறிய சர்வதேச விசாரணையை முன்னெடுத்துச்செல்வதே தற்போதைய தேவை. ஆகவே, இன்று கோரப்படும் சர்வதேச விசாரணை யாது? அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கை பாரதீனப்படுத்தப்படுவதா? அல்லது அது ருவாண்டா மற்றும் யூகோஸ்லாவியா போன்ற நாடுகளிலே உருவாக்கப்பட்ட நீதிமன்றங்களை ஒத்த பொறிமுறையா? நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியதைப்போல, இந்த இரு தெரிவுகளும் நடைமுறைச் சாத்தியமற்றவை. மேலும், அவை பாதிக்கப்பட்ட மக்களது தேவைகளைச் சந்திக்க வலுவற்றவை. உதாரணமாக, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலே நடைபெறும் இரண்டு அல்லது மூன்று வழக்குகளால் (பொதுவாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒரு நாட்டிலிருந்து ஒரு சிலர் மீதே வழக்குத் தொடர்வது வழக்கம்) எமது காணாமற்போன பிள்ளைகள் திரும்பிக் கிடைப்பதோ, நாம் இழந்த நிலங்கள் எமக்கு மீளக் கையளிக்கப்படுவதோ அல்லது நாட்டில் நிலவும் சட்ட ஒழுங்கின்மை சீராக்கப்படுவதோ நடைபெறப் போவதில்லை.

சர்வதேசக் கட்டமைப்பும், சர்வதேசச் சட்டமும் குற்றச்செயல்கள் இடம்பெற்ற நாடுகள் அவற்றை விசாரிக்க மறுக்கும் போது மாத்திரமே ஒரு சர்வதேச நீதிமன்றத்தை அமைக்க வழி செய்யும். இருப்பினும், காணாமற்போனோரைக் கண்டறிதல் பாதிக்கப்பட்டோருக்குப் பரிகாரம் மற்றும் நட்ட ஈடு என்பவற்றை வழங்கல் என்ற தேவைகளைப் பூர்த்தி செய்யும் முழுமையான சர்வதேசப் பொறிமுறை இதுவரை இருந்ததில்லை. குறித்த நாட்டின் அரசின் உடன்பாட்டுடன் நிறுவப்படும் சர்வதேச வகிபாகத்துடன் கூடிய உள்ளகப் பொறிமுறையால் மாத்திரமே மேற்கண்ட தேவைகளைச் சந்திக்க முடியும்.

பொது மக்களும், பாதிக்கப்பட்டோரும் இவற்றைப் புரிந்துகொள்வதில்லை. சர்வதேச விசாரணை என்று கூறும் போது சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்குள் வந்து, தம்மை விசாரித்து, ஆதாரங்களைத் திரட்டி, தமது பிள்ளைகளுக்கும், உறவுகளுக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடித்துக் கொடுப்பார்கள் என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை. இது உண்மையிலே நடக்கும் சாத்தியப்பாடு இருந்தால் இதனை விடச் சிறந்த பொறிமுறை இருக்க முடியாது என்பதில் ஐயமில்லை. ஆனால், இன்றிருக்கும் சர்வதேசக் கட்டமைப்புக்குள் மேற்கண்ட முறையில் அமைந்த வலிமையான விசாரணைப் பொறிமுறையொன்றை நிறுவ முடியாது. இலங்கை அனுமதித்தால் மாத்திரமே இது அமுலாக்கப்படலாம். இந்த விளக்கக் குறைவு பாதிக்கப்பட்டவர்களதோ அல்லது பொதுமக்களதோ தவறல்ல, மாறாக குற்றம் இன்றைய சர்வதேசக் கட்டமைப்புக்குள் எதைச் சாதிக்கலாம், எதைச் செய்யமுடியாது என்பவற்றை மக்களுக்கு விளக்கத் தவறிய அரசியல்வாதிகளையும், சட்டத்தரணிகளையும், கல்விமான்களையுமே சாரும்.

எனவே, இன்றிருக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறைகள் வெகு சொற்ப எண்ணிக்கையான வழக்குகளுக்கே இடமளிக்கும். மேலும், இப்பொறிமுறைகளால் தமது உறவுகளைத் தேடுவோருக்கு விடையளிக்கவோ, வேதனைப்படுவோருக்கு நிவாரணம் வழங்கவோ, அல்லது யாவும் இழந்து நிர்க்கதியுற்றவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவோ இயலாதெனில் இவற்றை அடைவதற்கான வழிமுறைதான் என்ன? உண்மைக்கான உரிமை, நீதிக்கான உரிமை, பரிகாரத்திற்கான உரிமை மற்றும் மீள்-நிகழாமைக்கன உறுதி என்ற பாதிக்கப்பட்டவர்களது அனைத்து உரிமைகளும் வென்றெடுக்கப்படுவதை உறுதிசெய்வது சகல தமிழ் அரசியல்வாதிகளுடையதும், சிவில் சமூக அமைப்புக்களினதும் பொறுப்பாகும். இது நடைபெற களநிலையிலே முழுமையான மாற்றம் அவசியம். இதற்கு உறுதியான சர்வதேச அழுத்தம் தேவை. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிட்ட களத்திலே ஒரு நியாயமான நீதிப் பொறிமுறை அவசியம். அத்தகையதொரு பொறிமுறை நம்பத்தகுந்ததாக இருப்பதற்கு, பொறிமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் சர்வதேச வகிபாகம் அவசியம். நீதியை மழுங்கடிக்க முன்னெடுக்கப்படும் காய் நகர்த்தல்களைத் தடுக்கத்தக்க வலிமையான சர்வதேச வகிபாகமாக இருக்க வேண்டும்.

இன்று, இலங்கை அரசு முழுமையான உள்ளக விசாரணையை முன்மொழிகின்றது. அந்தப் பொறிமுறை, ராஜபக்‌ஷ அரசின் பொறிமுறைகளை விட எவ்வளவுதான் மேம்பட்டதாக இருந்தாலும், அது பாதிக்கப்பட்ட மக்களது நம்பிக்கையை பெற்றிராது. இவ்விடத்தில் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச விசாரணையின் அறிக்கை மிக முக்கியமானதொன்று. அந்த அறிக்கையின் சிபாரிசுகள் சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய உள்ளகப் பொறிமுறைகளுக்குச் சார்பானதாக இருந்தால் இலங்கை அரசு அதனை இலகுவில் புறக்கணிக்க முடியாது. மேலும், இந்த அறிக்கை வெளிவரக் காரணமாக விளங்கிய அமெரிக்க அரசும், அதன் சிபாரிசுகளை அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. எது நடப்பினும் பாதிக்கப்பட்டோர் நம்பிக்கையை இழக்கலாகாது. நாம் நெடுதூரம் பயணித்துவிட்டோம். 2009இல் மனித உரிமைகள் பேரவையானது இலங்கை அரசைப் பாராட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் கொடூரமான குற்றச்செயல்கள் இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டு, இலங்கைக்குள் அந்தக் குற்றச்செயல்களை விசாரிக்கவும் இணங்குவார். நீதிக்கான எமது பயணத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு இதுவே சான்று. பாதிக்கப்பட்டோருக்கு இது எவ்வகையிலும் போதுமானதாக இராவிட்டாலும், சரித்திரம் பின்னிட்டுப் பார்க்கும்போது, பாதிக்கப்பட்ட தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் செப்டெம்பர் 2015 ஒரு பிரதான மைல் கல்லாகவே கொள்ளப்படும்.

நிறான் அங்கிற்றல்

Additional Info

Niran Anketell

Niran is an Attorney-at-Law who has litigated human rights, constitutional law, and civil cases in Sri Lankan courts for over seven years. He graduated with an honours degree in law from the University of Colombo, where has was awarded the Gold Medal for Most Outstanding Student, before taking oaths in 2008. Niran was thereafter awarded two full scholarships—the Fulbright Scholarship and the prestigious Hauser Global Scholarship—to pursue an LL.M in International Legal Studies at New York University.

Niran has also worked at the International Co-Prosecutor’s Office at the Extraordinary Chambers in the Courts of Cambodia (ECCC) as a Fellow of the Centre for Human Rights and Global Justice, New York. He has published widely on constitutional reform and Transitional Justice, and currently serves on the Sri Lankan Constitutional Assembly’s Panel of Experts and on the Expert Panel of the Task Force on Transitional Justice Consultations. Niran has taught undergraduate and postgraduate course on international law, criminal law, Transitional Justice and human rights at the University of Colombo.

Outside the law, Niran’s interests are in rugby and politics.