18 February 2017

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு: அரசாங்கம் முதன்மைப்படுத்துவது நீதியை மறுப்பதற்காகவா?

Written by

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்விற்கு இன்னமும் ஒரு மாதகாலத்திற்கு சற்றே அதிகமான காலப்பகுதியே இருக்கின்றது. இந்த அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் ராட் ஹுசைன் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆணைப்படி இலங்கை தொடர்பான தனது அறிக்கையை மார்ச் 22ஆம் திகதியன்று சமர்ப்பிக்கவுள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நிலைமாற்று கால நீதியில் ஈட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கை இலங்கை அரசாங்கம் முன்வைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனபோதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான குற்றமிழைத்தவர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்கு விசாரணைகளுக்கான விசேட நீதிமன்றத்தை அமைத்தல் மற்றும் விசேட வழக்குத்தொடுநர் பிரிவை நியமித்தல் போன்ற விடயங்கள் எப்போது இடம்பெறும் என்ற விடயத்தில் கால நிரலை இன்னமும் அரசாங்கம் உறுதிசெய்துகொள்ளவில்லை. விசேட நீதிமன்றம் மற்றும் விசேட வழங்குத்தொடுநர் பிரிவு தொடர்பாக 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அமைப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தபோதும் இவை காலவரையறையின்றி பிற்போடப்படுமென சிவில் சமூகத்தவர்கள் அச்சம்கொண்டுள்ளனர். குற்றவியல் வழக்கு விசாரணைக்கான பொறிமுறையை விடவும் உண்மை ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதை முன்னிலைப்படுத்தும் வரிசைக் கிரம வீயூகத்தின் அடிப்படையிலேயே இந்த தாமதிப்பு இடம்பெறுவதாக கருத இடமுண்டு.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணமற்போனோருக்கான அலுவலகம் தொடர்பான சட்டமானது இன்னமும் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்படாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளில் முடங்கிக்கிடக்கின்றமை இந்த அச்சத்தை அதிகப்படுத்த வழிகோலுகின்றது.

லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து பெறப்பட்ட அனுபவத்திற்கு அமைவாக உண்மை ஆணைக்குழுவானது குற்றவியல் வழக்கு விசாரணை நடவடிக்கைக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பதான கருத்துநிலைப்பாட்டிற்கு அமைய இந்த நிலைப்பாட்டிற்கு நிலைமாறுகால நீதி தொடர்பான விற்பன்னர்கள் மத்தியிலும் ஆதரவுத்தளமுள்ளது. ஆனால், ‘நீதியைப் பெற்றுக்கொடுப்பதை தாமதிக்கும்’ பொறிமுறையானது பல நாடுகளின் கொள்கையாக இன்று மாறிவிட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் நீதியை அடையும் விடயத்தில் காணப்பட்ட சட்டரீதியான மற்றும் அரசியல்ரீதியான தடைகள் காணப்படாத நிலையிலும் இந்த தாமதிக்கும் செயற்பாடானது இடம்பெறுகின்றமை கவலைக்குரியதாகும். நிலைமாறுகால பொறிமுறைகளை வரிசைக்கிரமத்தின் படி நடைமுறைக்கிடும் உபாயநடவடிக்கை குற்றவியல் வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் ஏதுநிலையை உருவாக்குவதற்காக அன்றி இந்த நிரந்தரமாகவே நீதியை மறுக்கின்ற மறந்துபோகச்செய்கின்றமைக்கு வழிகோலும் தாமதித்தல் அணுகுமுறையானது பல இடங்களில் மோசமான விளைவுகளைப் பெற்றுத்தந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டவேண்டும்.

உண்மையில் சில சந்தர்ப்பங்களில் அரசாங்கங்கள் நீதி விசாரணைகளை தவிர்க்கும் நோக்குடனேயே உண்மை ஆணைக்குழுக்களை அமைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, குவாட்மாலா நாட்டில் போராளிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மரியோ என்ரிகஸ் “நாம் சிலி நாட்டில் அமைக்கப்பட்டதைப் போன்ற உண்மை ஆணைக்குழுவிற்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றோம். ஆனால், நீதி விசாரணைகள் இருக்கமாட்டாது” எனக் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். லத்தின் அமெரிக்க நாடுகளின் அனுபவங்கள் சில அரசாங்கங்களின் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறாத நீதியிலிருந்து விடுபட்டுச் செயற்படும் சட்ட விலக்களிப்புத்தன்மைமைக்கு ஆதரவான முறையில் திரிவுபடுத்தப்படுத்தப்படுகின்றமைக்கு இந்தக் கூற்று சான்று பகர்கின்றது. இதன் விளைவாக உண்மை ஆணைக்குழுவை அமைப்பதானது பல நாடுகளில் வெற்றிகரமான முறையில் நீதி விசாரணைகளைத் தவிர்ப்பதற்கு வழிகோலியுள்ளமை தெளிவாகின்றது.

உகண்டாவில் பெறப்பட்ட அனுபவங்களுக்கு அமைய நீதி விசாரணைகளுக்கு முன்பாக உண்மை ஆணைக்குழு செயற்பாடுகள் இடம்பெறுகின்றமையானது வழக்கு விசாரணையின் சாத்தியக்கூறுகளை மழுங்கடிக்கச்செய்கின்றமை கோடிட்டுக்காட்டப்படுகின்றது. 1986ஆம் ஆண்டில் முஸேவெனி தலைமையிலான அரசாங்கம் உகண்டாவில் ஆட்சிக்கு வந்தது. அந்தவேளையில் முன்னைய ஆட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்திருந்ததுடன் நம்பகத்தன்மையையும் தொலைத்திருந்தது. இதனால், கடந்தகால அநீதிகள் தொடர்பாக பொறுப்புக்கூறும் கடப்பாட்டை முன்னெடுப்பதற்கு எவ்விதமான தடைக்கற்களும் இருக்கவில்லை. 1986இல் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவனம் செலுத்தும் நோக்குடன் உகண்டா விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு அதன் ஆணைக்கமைவாக எட்டு வருடங்களின் பின்னர் விசாரணைகளை நிறைவுசெய்தது. இத்தனை நீண்ட காலங்கள் எடுத்தபோதும் அரசாங்கம் ஆணைக்குழுவின் கண்டறிதல் முடிவுகளை பகிரங்கமாக வெளியிடவில்லை. அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருந்த பரிந்துரைகளையும் அரசாங்கம் கவனத்திலெடுக்க மறுத்ததுடன் எந்தவிதமான குற்ற விசாரணை நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கவில்லை. நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படுகின்ற உண்மை ஆணைக்குழுக்களின் நடைமுறையானது நீதி விசாரணைகளை நடத்துகின்றமைக்கான சந்தர்ப்பங்களை இல்லாமற்செய்துவிடுகின்றது. அன்றேல் அதற்கான அரசியல் இடைவெளியை மூடிவிடுகின்றது. இந்த நடைமுறையை அரசாங்கம் தேர்ந்தெடுத்தமை துரித விசாரணைகளுக்கான கதவை முன்கூட்டியே அடைத்துவிடுவதற்கு வித்திடுகின்றது. உகண்டாவில் மீண்டும் அரசாங்கத்திற்கும் போராளிகளுக்கும் இடையிலான மோதல் வெடித்தது. அதன் பின்னர் 2006ஆம் ஆண்டில் இருதரப்பிற்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரையில் விசாரணைகளுக்கான சந்தர்ப்பம் அடைக்கப்பட்டே இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. எனினும், உகண்டாவில் குற்றங்களை இழைத்துவிட்டு சுதந்திரமாக நடமாடித்திரிகின்ற சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலைமையுடைய கலாசாரத்திற்கு முடிவுகட்ட அந்த நாட்டு அரசாங்கம் ஆணித்தரமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பில் குற்றவியல் நீதி வழக்கு விசாரணையை முன்னெடுப்பதற்கு இதயசுத்தியுடனான நோக்கத்தைக் கொண்டிராத அரசாங்கங்கள் கூட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கின்றதைக் காணமுடியும். கடந்த கால அநீதிகள் தொடர்பாக பொறுப்புக்கூறும் கடப்பாட்டிற்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட தடங்கல்களை ஏற்படுத்துவதற்கு இந்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதை வரலாறுகளும் கோடிட்டுக்காட்டி நிற்கின்றன. இந்த விடயத்தில் நேபாளம் சிறந்த உதாரணத்தை வழங்கிநிற்கின்றது. உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவது தொடர்பாக 2014ஆம் ஆண்டில் நேபாளத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமானது பல்வேறு பிரச்சினைக்குரிய சரத்துக்களை கொண்டுள்ளது. இந்தச் சட்டமானது பாரதூரமான மனித உரிமை மீறல்களை புரிந்தவர்களுக்கு குற்றவியல் வழக்கு விசாரணைகளிலிருந்து பொதுமன்னிப்பு வழங்க இடமளிக்கின்றது. இதற்கு மேலதிகமாக குற்றவியல் வழக்கு விசாரணைகளுக்கு மேலும் தடங்கல்களை ஏற்படுத்துவதற்கான சரத்துக்களைக் கொண்டதாக இந்தச்சட்டம் அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. யார் பொதுமன்னிப்புக்கு தகுதியானவர்? யார் குற்றவியல் வழக்கு விசாரணைக்காக முன்கொண்டுசெல்லப்படவேண்டியவர்? என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை நேபாளத்தின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கொண்டுள்ளது. இது மிகவும் பிரச்சனைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.

இலங்கையிலும் கூட விசேட நீதிமன்றமொன்றை அமைப்பதற்கு முன்பாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக பலரும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வியூகமானது குற்றவியல் வழக்கு விசாரணை நடத்தவேண்டும் என்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தங்களை திசைதிருப்புவதற்குப் பயன்படுத்தப்படும் என்பதே அந்த அச்சத்திற்கான முக்கிய காரணமாகும். உண்மையைக் கூறுவதெனில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான எண்ணக்கருவானது புதியதொன்றல்ல. இழைக்கப்பட்ட மாபெரும் அட்டூழியங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை வலியுறுத்திய சர்வதேச அழுத்தங்களை நிறுத்தும் நோக்குடன் முன்னதாக ராஜபக்‌ஷ அரசாங்கமும் கூட தென் ஆபிரிக்க மாதிரியை அடியொற்றிய உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்திருந்தது. இந்தநிலையில், விசேட நீதிமன்றம் மற்றும் விசேட வழக்குத்தொடுநர் பிரிவை அமைப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றுமுன்பாக உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பல்வேறு சந்தேகங்களுக்கு வழிகோலுகின்றன. பெருங் குற்றங்களை இழைத்தவர்கள் விடயத்தில் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிலைநாட்டுவதற்காக நீதிப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு முன்னதாக உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை முதன்மையாக ஸ்தாபிக்கும் வரிசைக்கிரம ஒழுங்குமுறையானது எத்தகைய அபாயங்களைக் கொண்டுள்ளதென்பதை ஏனைய நாடுகளின் உதாரணங்கள் சுட்டிக்காட்டிநிற்கின்றன. இத்தகைய பின்புலத்தில் இது போன்றதொரு வியூகத்தை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் எத்தகைய முயற்சிகளையும் கடுமையாக எதிர்க்கவேண்டியது அக்கறைகொண்ட சகல தரப்பினரின் பொறுப்பாகும்.

 

Additional Info

Dr Isabelle Lassée

Isabelle has worked in Sri Lanka for the past five years. Previously, she has interned at the prosecutor’s office at the Khmer Rouge tribunal in Phnom Penh, and has worked at several UN agencies and NGOs in France, Ghana, the Maldives. She has also taught international human rights law, international humanitarian law and international criminal law at various universities including Sciences Po, Paris.

Isabelle has a doctorate in international law with high honours from Université Paris II Panthéon-Assas. Her doctoral research focused on the role and contribution of UN mandated commissions of inquiry to peace building, human rights protection and Transitional Justice. She holds a Master’s degree in human rights and humanitarian law from Panthéon-Assas, an advanced research diploma in international law from the Institut des Hautes Etudes Internationales, and a certificate in criminology from the Institut de Criminologie de Paris.

Isabelle is an avid extreme sports enthusiast, but since arriving in Sri Lanka has given up sky-diving for kite-surfing.