08 April 2017

நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலுள்ள சவால்கள்

Written by Esther Hoole

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, யுத்தகாலத்தில் இடம்பெற்ற விடயங்கள் சம்பந்தமாக வகைப்பொறுப்பு கூறுவதற்கும் அத்துடன் நல்லிணக்கத்தை தோற்றுவிப்பதற்கும் ஏற்புடைய பிரச்சினைகளை இலங்கைகுள்ளேயே தீர்க்குமாறு இலங்கை உந்தப்பட்டுள்ளது.. 2015 ஆம் ஆண்டு இலங்கையின் இணை அணுசரணையுடன் கொண்டுவரப்பட்ட ஜெனீவா பிரேரணையானது உண்மை, நீதி, இழப்பீடு செய்தல் மற்றும் மீள் நிகழாமை போன்றவற்றை நோக்கிய அர்த்தபுஷ்டிமிக்க முதலாவது படிமுறையை தோற்றுவித்தது. இந்த பிரேரணையின் கீழ், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு, காணாமற் போன ஆட்களைப் பற்றிய அலுவலகம், இழப்பீட்டிற்கான அலுவலகம் மற்றும் விசேட வழக்குரைஞரைக் கொண்ட விசேட நீதிமன்றம் ஆகியற்றின் ஊடாக நிலைமாறுகால நீதியை நோக்கிய பயணமொன்றிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனும் உறுதிமொழியை இலங்கை சர்வதேச சமூகத்திற்கும் தமது பிரசைகளுக்கும் வழங்கியது.

நிலைமாறுகால நீதி பொறிமுறைகளில் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் பங்குபற்றும் போது அது நீதிமன்ற நடவடிக்கைளாக இருப்பினும் நீதிமன்றங்கள் சாராத நடவடிக்கைளாக இருப்பினும் அவர்கள் அரச பணித்துறையுடன் மேற்கொள்ளுகின்ற இடைச்செயற்பாட்டின் போதும் அல்லது வழக்கு விசாரணை செயன்முறைக்குள்ளே அவர்கள் நடத்தப்படும் விதத்திலும் மீண்டும் அவர்கள் பாதிப்புக்குள்ளாகக்ககூடிய இடர்வருநிலையை எதிர்நோக்குகின்றனர். இலங்கையின் அண்மைக்கால வரலாற்றினை நோக்குகையில் பொலிசாரும் பாதுகாப்பு பிரிவினரும் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் அனர்த்தத்திற்கு உள்ளாக்கியேனும் தங்களது நிருவாக வினைத்திறனை முன்னுரிமை படுத்துகின்றனர் அல்லது மற்றைய சில சந்தர்ப்பங்களில் சாட்சிகளையும் அவர்களது குடும்பங்களையும் மனித உரிமை வழக்குகளை கைவிடுமாறு அல்லது வழக்கு விசாரணைகளில் பங்கேற்றகாமல் இருக்குமாறு அச்சுறுத்துவதன் மூலம் அழுத்தம்கொடுக்கின்றனர். இவ்வாறான மீறல்கள் விசேட நீதிமன்றங்கள், உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழுக்கள் மற்றும் காணாமற் போன ஆட்களைப் பற்றிய அலுவலகங்கள் போன்றவற்றின் இயக்கத்துடன் தொடர்புடையதாக இருக்குமெனில் அவ்வாறான பொறிமுறைகள் வேறு எவ்வாறான சாதகமான இயல்புகள் கொண்டிருப்பினும் அவை வெறுமனே அர்த்தமற்றதொரு நடைமுறையாகவே மாற்றமடையும். இவ்விடயத்தில் மிகவும் முக்கியமான தகவல்களை வெளிக்கொண்டுவருவதற்கு ஆற்றலுடைய இவ்வாறான பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் மிகவும் பீதியடைந்து தவறுசெய்தவர்களை பகிரங்கமாக கூறாமல் விட்டுவிடுவதுடன் இதன் விளைவாக தவறாளிகள் நீதிக்கான நடைமுறையிலிருந்து மீண்டும் தப்பிக்கொள்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான நிகழச்சித்திட்டங்களின் போதியளவு சுயாதீனத்தன்மை காணப்படாமை கடந்த காலத்தை சம்பவங்களை நேர்மையாகவும் ஆக்கபூர்வமாகவும் ஆராய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மழுங்கடித்துவிடும்.

ஆகவே, இவ்வாறான நிறுவனங்கள் வினைத்திறன்மிக்க வகையில் இயங்க வேண்டுமாயின் இலங்கை பலம்பொருந்தியவகையில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாக்கின்ற முறைமையொன்றை தாபிக்க வேண்டுமென்பதுடன் இந்த முறைமை சுயாதீனத்தன்மை, நம்பகத்தன்மை, மற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்காக 2015 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டம் அவ்வாறக பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்காக இலங்கையில் ஆக்கப்பட்டுள்ள சட்டங்களின் முன்னோடிச் சட்டமாக இருப்பினும் அது அன்று தொட்டே பெரும் விமர்சணத்திற்கு உள்ளாகியுள்ளது. அரசாங்கம் மற்றும் பொலிஸ் உயர்மட்டங்களிலிருந்து குறிப்பாக இந்த பாதுகாப்பு சட்டகத்திற்கு கிடைத்திருக்கும் குறைவான சுயாதீனத்தன்மை அவ்வாறான விமர்சகர்களின் விமர்சனத்துக்குள்ளாகியது. இந்நிலையில் யுத்தகாலத்தில் புரியப்பட்ட அட்டூழியங்களைப் பற்றிய சாட்சியளிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை பாதுகாக்கும் பொறுப்பினை பொலிசாருக்கு கையளிப்பாளர்கள் என்பது சந்தேகித்திற்கிடமானதாக இருப்பதுடன் இதற்கான காரணம் இவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்தகாலத்தில் பெருமளவிலான துஷபிரயோபகங்களை புரிந்தவர்களாகவும் யுத்தம் நிறைவுபெற்றதையடுத்து தொடர்ச்சியாக அச்சுறுத்தலாக இருந்தவர்களாகவும் இருப்பதனால் ஆகும். அநேகமானவர்கள் அச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான மீறல்களாகவும் இந்நலையில் மேற்படி பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான தேசிய கட்டமைப்பு போதியளவு உறுதிப்பாட்டி்னை அல்லது பாதுகாப்பினை பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கு வழங்க முடியாது.

நிலைமாறு கால நீதி செயன்முறைக்குள்ளே பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் இவ்விடயத்தில் கடந்த காலத்தில் இலங்கை முகம்கொடுத்த தோல்விகள் போன்றதொரு நிலையை முகம்கொடுப்பதற்கு வாய்ப்பளிக்கக்கூடாது. இந்நிலையில் பாரியளவிலான மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களையும் அதுசார்நத சாட்சிகளையும் பாதுகாக்கும் விடயத்தில் எழும் தனித்துவமான சவால்களையும் தேவைகளையும் சமாளிக்கும் பொருட்டு இலங்கையின் நிலைமாறு கால நீதி பொறிமுறைகளில் ஈடுபடும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அல்லது உதவி வழங்குவதற்கு விடேமானதொரு சட்டகமொன்றை ஈடுபடுத்திக்கொள்வது அவசியமாகவிருக்கின்றது.

நிலைமாறு கால நீதியானது உண்மை, நீதி, மற்றும் நிறுவனரீதியிலான மறுசீரமைப்புகள் போன்றவற்றை நோக்கிய பங்கேற்புமுறையிலானதொரு பயணமாகும். ஆகவே, வெற்றிகரமான ஒவ்வொரு நிலைமாறுகால நீதி செயன்முறையும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் வழங்கப்படும் உதவிகள், ஒத்தாசைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை விட்டுகொடுக்கப்படாமல் இருக்கின்றதென்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் உச்ச மட்டத்தில் வைத்து பேணுவதற்கு ஆவண செய்தல் வேண்டும். எவ்வாறாயினும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிலைமாறுகால் நீதி சூழமைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் விடயம் தனித்துவமிக்க பல கரிசணைகளையும் சவால்களையும் கொண்டுள்ளதென இதன்மூலம் புலனாகின்றது.

மனித உரிமைகள் சட்டகமொன்றின் கீழ், அரசுகள் தங்களின் ஆளுகைப் பிரதேசத்திலுள்ளவர்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடப்பாட்டினை கொண்டுள்ளது. இந்த கடப்பாட்டினை நிறைவேற்றுதல் ஒருபுறமிருக்க சாதாரண குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கும் அவ்வாறான சாட்சிகள் நீதிமன்ற செயன்முறைக்கு பெறுமதிவாய்ந்ததாக அமைவதால் விசேட பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. நிலைமாறுகால நீதி செயன்முறையை பொருத்தமட்டில், சாட்சிகளை பாதுகாத்தல் எனும் விடயம் மேலதிக கடப்பாடுகளை ஈடேற்றும் பொருட்டு வலுவூட்டப்பட்டுள்ளதுடன் விரிவான தேவைகளுக்கு சேவையாற்றுகின்றது. சாட்சிகளைப் பாதுகாக்கும் பொறிமுறை குறிப்பாக பரிகாரத்திற்காக பாதிக்கப்பட்டவர் கொண்டுள்ள உரிமையை நிலைநிறுத்தப்படுவதற்கு அத்தியாவசியமானதாக அமைகின்றதென மனித உரிமைகள் குழு வலியுறுத்திக்கூறுகின்றது. மேலும், நிலைமாறு கால நீதி செயன்முறைக்குள்ளே பாதிக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளின் பாதுகாப்பானது பாதிக்கப்பட்வபர்களினாலும் சாட்சிகளினாலும் வழங்கப்படும் சாட்சிகளின் பெறுமதி எவ்வாறாக இருப்பினும் அவர்களை பங்கேற்கச் செய்வதை ஊக்குவிக்கபதாக வலுவூட்டப்பட்டிருத்தல் வேண்டும். உண்மையிலேயே, எந்தவொரு நிலைமாறுகால நீதி செயன்முறையிலும் பாதிக்கப்பட்டவர்களின் பங்கேற்பு, பாதுகாப்பு மற்றும் மான்பு ஆகியவற்றின் முக்கியத்துததை ஐக்கிய நாடுகள் வலியுறுத்துகின்றது.

இரண்டாவதாக, நிலைமாறுகால நீதியின் கீழ்வரும் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் ஏனைய சட்டப்படியான அல்லது திட்டமிடப்பட்ட குற்றவியல் குற்றங்களின் சாட்சிகளை வித்தியாசமான தேவைகளையும் எளிதில் பாதிப்படையக்கூடிய நிலைகளையும் கொண்டுள்ளனர். உதாரணமாக, நிலைமாறு கால நீதி சூழமைவுகளில் உள்ளடங்கும் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் பொதுவாக கொடூரமானதும் திட்டமிடப்பட்டதும் தாபனப்படுத்தப்பட்டதுமான வடிவங்களைக் கொண்ட வன்முறைகளுக்கு உள்ளாவதுடன் சில சமயம் அவை பல பரம்பரை காலம் வரை நீடிக்கமுடியும். இந்நிலைமை ஏனைய சாதாரண அல்லது திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களிலும் காணக்கூடியதாக இருப்பினும் அப்படியாக காணப்படும் வாய்ப்பானது மிகவும் அரிதானதாகவே இருக்கின்றதென்பதுடன் அது அவ்வாறான குற்றச்செயல்களின் பொதுவான தன்மையாக அல்லாமல் விதிவிலக்கானதொரு நிலையாகவே இருக்கின்றது. ஆகவே, நிலைமாறு கால நீதி எனும் விடயத்தில் சாட்சிகளுக்கான பாதுகாப்பு முன்னுரிமைப்படுத்தப்படுவதைப் போலவே சாட்சிகளுக்கான உதவி வழிமுறைகளும் முன்னுரிமைப்படுத்தப்படுதல் அவசியமானதாகும். மேலும், சாட்சிகளுக்கான உதவிகள் கடந்த காலத்தையும் சம்பந்தப்பட்ட மோதலுக்கான மூலக்காரணங்களையும் பற்றிய சிறந்த புரிந்துணர்வுடன்கூடிய உளசமூக உதவிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பல்துறைசார்ந்த அணுகுமுறையினை கொண்டிருத்தல் வேண்டும்.

மூன்றாவதும் மிகவும் முக்கியமானதும் விடயம் யாதெனில் நிலைமாறுகால நீதி முறைக்கான ஏற்பாட்டின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கெதிரான வன்முறைகள் அல்லது வன்முறைக்கான அச்சுறுத்தல்கள் தனிநபர்கள் அல்லது ஒழுங்கமைந்த தனியார் தரப்புகளிடமிருந்து அல்லாமல் அரச மட்டத்திலிருந்து அல்லது முன்னாள் அரச மட்ட அமைப்புகளிலிருந்து தோற்றம் பெறுகின்றது. இதற்கான காரணம் நிலைமாறு கால நீதி ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் அநேகமான சந்தர்ப்பங்களில் அரச மட்ட அமைப்புகளினால் புரியப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பாகவே சாடசியமளிக்கின்றனர். மேலும், அரச சட்ட அமுலாக்கல் பொறிமுறைக்குள்ளிருப்பவர்கள் சாட்சியம் வழங்கும் போதும் அவர்கள் அரச மட்டத்திலான வன்முறைக்கு உள்ளாகக்கப்படுவதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கின்றனர் இவ்வாறானதொரு பின்னணியில் நிலைமாறு கால நீதி ஏற்பாட்டிற்குட்பட்ட சாட்சிகளை பாதுகாக்கும் அலகுகள் அரச அதிகாரத்தைக் கொண்டுள்ள அமைப்புகளிலிருந்து தோற்றம்பெறும் அச்சுறுத்தல்களுக்கு பிரதானமான கவனத்தை செலுத்துதல் வேண்டும். இந்நிலை இலங்கை சூழமைவுக்கு மிகவும் பொருந்தக்கூடியதாக அமைகின்றதற்கான காரணம் யுத்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள், சித்திரவதைகள், காணமல் ஆக்கப்படுதல் போன்றவை பற்றிய குற்றச்சாட்டுகள் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது சுமத்தப்பட்டிருப்பதே ஆகும். ஆகவே, காணமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், எதிர்கால விசேட நீதிமன்றம் மற்றும் உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு ஆகிவற்றின் முன்னால் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அமைப்புகளுக்கு எதிராக சாட்சியம் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. ஆகவே, ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பெருமளவு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகள் மீது தங்கியிருப்பதைப் போன்றதொரு முறை கண்மூடித்தனமாக இலங்கையில் பின்பற்றுமாயின் அது இச்சூழமைவில் தவறானதொரு விடயமாக அமைந்துவிடக்கூடும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறித்த சவால்கள் மற்றும் தேவைகளை கருத்திற்கொள்ளும் போது சாட்சிகளை பாதுகாப்பதற்காக தேசிய ரீதியில் காணப்படும் குறைபாடுகளுடன்கூடிய முறைமையில் தங்கியிருப்பதைப் பார்க்கிலும் சுயாதீனமானதும் தன்நிறைவும் கொண்டவகையில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாக்கக்கூடிய பொறிமுறையொன்றை தனக்குள்ளேயே தாபித்துக்கொள்ளுதல் இலங்கையின் எதிர்கால நிலைமாறுகால நீதி பொறிமுறையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமென காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறானதொரு அணுகுமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் நம்பிக்கையூட்டுவதாக அமைவதுடன் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை நோக்கி இலங்கை பயணிக்கும் விடயத்தில் அவர்களின் செயலூக்கமிகு பங்களிப்பினை இது வெகுவாக உறுதிப்படுத்துவதாகவும் அமையும்.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட காணாமற் போன ஆட்களைப் பற்றிய அலுவலகத்திற்கான சட்டம் இந்த அலுவலகத்துடன் தொடர்புபடுகின்ற பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்குவதற்கும் வழிசமைக்கும் வகையில் தன்னாளுகையும் தன்னிறைவும் கொண்டவாறான பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான பிரிவொன்றினை தோற்றுவிக்கக்கூடிய ஏற்பாடுகளை கொண்டுள்ளது. இது கடந்த காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் பற்றி விசாரணை செய்யும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கு எந்தவித ஆற்றலையும் கொண்டிருக்காமல் அல்லது அடிப்படையில் பல குறைபாடுகளைக் கொண்ட பாதுகாப்பு முறைமைகளைக் கொண்டிருந்தாக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களுடன் ஒப்புநோக்குகையில் வரவேற்கத்தக்கதொரு மாற்றம் என கூற முடியும். ஆகவே, இந்த நிலைமாறு கால நீதிப் பொறிமுறை பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான பிரிவுகளை உருவாக்குமெனவும் அந்தந்த பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்பாணையை ஈடேற்றுவதற்கு வசதியளிக்கும் பொருட்டு அவற்றை உறுதியான முறையில் தாபிக்குமெனவும் நம்பிக்கை கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன.

Additional Info