இலங்கையிலே நிலைமாற்றுக்கால நீதி பற்றிய பேச்சுவார்த்தைகள் யாவுமே இதுவரைக்கும் காணாமற்போன நபர்களுக்கான அலுவலகம், விசேட வழக்குரைஞருடனான நீதிப் பொறிமுறை, உண்மை அறியும் ஆணைக்குழு மற்றும் திருத்தியமைத்தற் பணிகளுக்கான அலுவலகம் போன்றவற்றை நிலைநிறுத்த வேண்டியதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கள் பற்றிய நோக்காகவே முழுவதுமாக இருந்துவந்துள்ளது. ஆனால், நிலைமாற்றுக்கால நீதியின் மூலாதாரக் கூறாக உள்ளதான பாதுகாப்புத் துறையினரின் மறுசீரமைப்புப் பற்றி துரதிஷ்டவசமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் கருத்திற்கொள்ளவில்லை. OISL அறிக்கையின் பரிந்துரைகள் பட்டியலிலே பாதுகாப்புப் படையினரின் மறுசீரமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்புப் படையினர்களை முற்றுமாகப் பரிசீலித்து மனித உரிமை மீறல்களிலே ஈடுபட்டுள்ளதாக நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் இருக்கும் நபர்களை அதிலிருந்து அகற்ற வேண்டியதன் முக்கியத்துவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் இணை அனுசரனை வழங்கப்பட்ட அந்தத் தீர்மானம், குறிப்பாக, நேர்மையான நிர்வாக முறைமையினூடாக மோசமான குற்றச்செயல்களிலே ஈடுபட்டுள்ள எவரையும் படையிலே சேர்ப்பதற்கோ அல்லது தொடர்ந்து தங்கவைப்பதற்கோ எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவின் அர்ப்பணிப்பு, இந்தப் பரிந்துரைப்பினை எதிரொலிப்பதாய் உள்ளது. பாதுகாப்புத் துறையினரின் மீள்சீரமைப்பு பற்றிய இப்படியான அர்ப்பணிப்புக்கள் விடுக்கப்பட்டாலுங்கூட, நிலைமாற்றுக்கால நீதியின் மூலாதாரக் கூறாகிய இது வெகுசாதாரணமாக மறக்கப்பட்டுப்போனமை சஞ்சலத்தைத் தோற்றுவிப்பதாய் உள்ளது. குறிப்பாக, ஏனைய பொறிமுறைகளின் வினைத்திறனானதும் தடையின்றியதுமான தொழிற்பாட்டுக்கு அதன் முக்கியத்துவத்தை மனதிற் கொண்டுள்ள ஒருவருக்கு அது சஞ்சலத்தைத் தோற்றுவிக்கும்.

மனித உரிமைகளின் துஷ்பிரயோகங்களும் மற்றும் சர்வதேசக் குற்றச்செயல்களும் மீளவும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கே இப்படியான பாதுகாப்புத்துறை மீள்சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மனித உரிமைத் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூறச்செய்வதற்கும் இது உதவுகிறது. மேலும், வழக்குத்தாக்கல்கள் அநேகமாக அத்துமீறீயவர்களுள் சிறு தொகையினரிலேயே நோக்கக்குவியம் கொள்ளப்படுவதுண்டு. மீறியவர்களுள் பெரும்பாலானவர்கள் குற்றவியல் நீதிக்கு முன்பதாக என்றுமே கொண்டுவரப்படாமையானது ஒரு “தண்டனையின்மை இடைவெளியை” உருவாக்குகிறது. சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதநேய விதிமுறைகள் ஆகியவற்றை மீறியுள்ளமை தொடர்பாக இலங்கை, பாதுகாப்புப் படைத்துறையானது ஒரு நீண்ட குற்றப் பட்டியலுக்கு முகங்கொடுத்து வந்துள்ளது. இலங்கையிலே நிலைமாற்றுக்கால நீதியானது வினைத்திறனுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமேயாயின், மீறுதல்களுக்குப் பொறுப்பாக இருந்துள்ள நிறுவனங்கள் சமாதனம் மற்றும் நல்லுறவுக்கு ஆதரவு வழங்குபவையாக மாறும்படி உருமாற்றப்படவேண்டியது அவசியமானதாகும். துஷ்பிரயோகம் செய்த நிறுவனங்கள் மக்களைப் பாதுகாக்கும் நிறுவனங்களாக ஆகி, செயலிழந்தும் சமநிலைதழம்பியும் உள்ள நிறுவனங்கள் பற்றிய நினைவுகளை அகற்றுமளவுக்கு அவை வினைத்திறனுடனும் நேர்மையுடனும் செயற்பட்டு குடிமக்கள் நம்பிக்கையை மீளப்பெறவேண்டும்.

பாதுகாப்புத் துறையினை மீள்சீர்திருத்துவதற்கான மிக முக்கியமான பகுதி பாதுகாப்புப் படையினர்களை முற்றாகப் பரிசீலிப்பதாகும். சீர்திருத்தச் செயன்முறையின் இதர பகுதிகள் கட்டமைப்பு தொடர்பான அம்சங்களுடன் இடைப்படுவதாய் இருக்க, முற்றாகப் பரிசீலிப்பதானது அந்தத் துறையினுள் உள்ள தனிநபர்களுடன் இடைப்படுவதாக உள்ளது. இது பொதுமக்கள் சேவையிலே பணிசெய்வதற்கு ஒவ்வொரு நபரினதும் பொருத்தப்பாட்டைத் தீர்மானிக்கும் செயன்முறை எனவும், மனித உரிமைகள் துஷ்பிரயோகங்களுக்குத் தனிப்பட்ட ரீதியிலே பொறுப்பான தனிநபர்களை அகற்றுவதை நோக்காகக் கொண்டது எனவும் விபரிக்கப்படுகிறது. கடந்த காலத்துடன் இடைப்படும்படியாக இலங்கைக்குள் TJ பொறிமுறையின் வருகையானது நம்பத்தகுந்த பாதுகாப்புப் படையினரின் பிரசன்னத்தை வேண்டிநிற்கிறது. மனித உரிமைகளின் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் விசாரணைகளிலும், உண்மை அறியும் ஆணைக்குழு முன்பாகவும், காணாமற்போனோர்களுக்கான அலுவலகத்திலும் சாட்சியம் வழங்கவேண்டிய தேவை ஏற்படும். பாதுகாப்புப் படையினரிலே நம்பிக்கை இல்லாதபட்சத்திலே எந்த ஒரு உண்மை அறியும் அல்லது நீதிச் செயன்முறையும் பயத்தின் மூட்டத்துக்கு உள்ளாகி, கடந்தகாலமானது முடிவுக்குக் கொண்டுவரப்படாத நிலைமை நீடிக்கும். தற்போது அப்படியான நம்பிக்கையும் உறுதியும் நிலவாதபட்சத்திலே ஒரு முழுமையான பரிசீலனைச் செயன்முறை இலங்கைக்கு வேண்டியதாய் உள்ளது.

முழுமையான பரிசீலனைச் செயன்முறையானது, சில நாடுகளிலே மேற்கொள்ளப்படும் முழு அளவிலான களையெடுப்பைப் போலல்லாது, மனித உரிமை மீறல்களுக்குப் பாதுகாப்புத் துறைக்குள் பொறுப்பானவர்களாகக் காணப்படுபவர்களை இனங்காண்பதற்கும் அந்த நபர்களை அகற்றுவதற்குமான முறையானதும் கட்டமைக்கப்பட்டதுமான செயன்முறையை உள்ளடக்கியது. OHCHR இனால் வழங்கப்படும் நடவடிக்கை வழிகாட்டல்கள் முழுமையான பரிசீலனைக்கான கட்டமைப்பை முன்வைத்துள்ளது. முதலாவதாக, சீர்திருத்தம் தேவையான பகுதிகளை இனங்காண்பதற்கு சமூகப் பின்புலத்தின் மதிப்பாய்வுடன் சேர்த்து மதிப்பாயவேண்டிய நிறுவனம் மற்றும் அதன் நபர்களின் மதிப்பாய்வு. அதனைத் தொடர்ந்து, முன்னைய மதிப்பாய்வின் அடிப்படையிலே அப்படியான சீர்திருத்தத்துக்கு வேண்டியதான நியமங்களும் அளவுருகளும் வகுக்கப்படும். இது பணியாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் கூற்றாக்கம், பணி முன்தேவைகள் மற்றும் தகைமையிலும் நேர்மையிலும் சார்ந்ததாக உள்ளதான தனிநபர் நியமங்கள் போன்றவைகளை உள்ளடக்கும். சர்வதேச மனித உரிமைகள் பற்றிய நியமங்கள் மற்றும் தொழிற்தார்மீக நடத்தை போன்றவற்றையிட்டுத் தனிநபர்கள் கொண்டுள்ள இணக்கத்தினால் அவரவர்களின் நேர்மையானது நேரடியாகத் தீர்ப்பிடப்படும். இந்த நியமங்கள் வரையறுக்கப்பட்டதும், ஒரு சீர்த்திருத்தச் செயன்முறையானது வடிவமைக்கப்படவேண்டும். அப்படியான செயன்முறையின் சுயாதீனத்தையும் சட்டபூர்வத் தன்மையையும் உறுதிசெய்யும்படியாக, அவைகள் பாதுகாப்பு நிறுவனங்கள் சாராத தனியான ஒரு ஆணைக்குழுவினால் நடாத்தப்படல் வேண்டும். அப்படியான ஒரு செயன்முறையானது பணியாளர்களைப் பதிவுசெய்தல், அவர்களை பரிசீலனைக்கு உள்ளாக்குதல், அவர்களின் பின்புலத்தை விசாரித்தல், அவர்களின் தகுதிறனை மதிப்பாய்வு செய்தல் போன்றவைகளை உள்ளடக்கியிருக்கும். யுத்தத்துக்குப் பின்பதான நாடுகளிலே நிலைமாற்றுக்கால நீதியைப் பற்றியதான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அறிக்கையானது எப்படியாக விசாரணைக்கு உள்ளாக்கப்படும் தரப்பார்களுக்கு அவர்களையிட்டதான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு, நிர்வாக அலகின் முன்பதாக அந்தக் குற்றச்சாட்டுகளையிட்ட அவர்களது மாறுத்தாரங்களைக் கூறும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. வழக்கையிட்டதான போதிய அவகாச அறிவிப்பு, வழக்கைச் சவாலிடும் உரிமை அவர்களுக்குப் பாதகமானதாகக் கூறும் தீர்ப்புக்களையிட்டு அவர்கள் நீதிமன்றத்துக்கோ அல்லது வேறு சுயாதீன அலகுக்கோ அப்பீல் செய்யும் உரிமை போன்றதான உரிமைகள் அவர்களுக்கு உண்டு.

இவை அனைத்துமே கட்சித் தொடர்பிணைப்பு, அரசியற் கருத்து அல்லது வேறொரு அரச நிறுவனத்துடனான கூட்டிணைவு போன்றவற்றின் அடிப்படையிலே கொடுபடும் தகுதியின்மை அல்லது நீக்கிவைத்தலின் பரந்துபட்டதான கதறல்களாகும். மறுபுறத்தே, முற்றுமான பரிசீலனையோ மனித உரிமைகளின் மோசமான மீறுதல்களை இழைத்த தனிநபர்களை மாத்திரமே அகற்றுவதை நோக்காகக் கொண்டதாய், சட்டத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக நடந்து கொண்டு பொருத்தமான வல்லமைப்புகளின் கௌரவத்தை நிலைநாட்டும் நேர்மைத்தனம்   கொண்ட, சகல குடிமக்களினதும் உரிமைகளைப் பாதுகாத்துத் தமது கடைமையை நன்கு செய்யக்கூடிய தகைமை கொண்ட தனிநபர்களைப் பாதுகாப்புத் துறையிலே விட்டுவைக்கும்.

உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்ட முற்றுமான பரிசீலிப்புகள் பல்வேறு விதப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளன. கொஸோவோ நாட்டிலே, கொஸோவோ உளவுத்துறை (KIA) யின்கீழ் பாதுகாப்பு அனுமதித் திணைக்களத்தால் முற்றுமான பரிசீலிப்பானது கையாளப்படுகிறது. இது சுயாதீனத்தை உறுதிசெய்யும்படியாக மேற்கொள்ளப்பட்டது. ஆயினும், இது   தொடர்பிலே உள்ளவைகளுடன்கூட, இந்தச் செயன்முறைகளை பொருட்டாகக் கருதாத நாடாளுமன்ற உறுப்பினர்கள், KIA இன் பொறுப்பில் உள்ள தொகுக்கப்பட்ட தகவல்களைப் பெற்றடைவதற்கு பாதுகாப்பு அனுமதி பெறவேண்டிய நிர்ப்பந்தமானது இதனை விவாதத்துக்குரிய விடயமாக்கிவிட்டுள்ளது. இவ்வண்ணமாக KIA இன் சிவில் மற்றும் ஜனநாயக மேற்பார்வை சமரசம் பண்ணப்படுகிறது. கொஸோவோவில் உள்ள அப்பீல் முறைமைகளும் சவாலானவைகளாக உள்ளன. அப்பீல்கள் யாவுமே KIA இற்குள் அமைந்துள்ளதும் சுயாதீனமானதெனக் கருதப்பட்டதுமான பிறிதொரு அலகுக்கு வழங்கப்பட வேண்டியதாக, அல்லது இக்கட்டான நிலைமைகளிலே நீதித்துறைக்கு வழங்கப்பட வேண்டியதாய் இருந்தது. அப்பீல்கள் KIA இடம் விடுக்கப்படவில்லை. அத்துடன், நீதித்துறை இப்படியாக வழக்குகளுடன் இடைப்படுவதிலே அனுபவம் குன்றியதாக இருந்தமையால், இறுதியிலே நாடாளுமன்றக் கமிட்டியன்று, அப்படியான அப்பீல்களுடன் இடைப்படுவதற்கு சட்டபூர்வ அனுமதி பெற்றிராத நிலைமையிலும், அவைகளுடன் இடைப்படத் தீர்மானித்தது. எகிப்திலே இந்த முறைமையானது நியமங்களை வகுப்பதிலே ஒரு சமநிலையைக் கண்டுகொள்வதற்காகத் தத்தளித்தது. அவர்கள் பரந்துபட்ட செயற்பாடுகளிலே ஈடுபட்டு, முன்னைய ஜனாதிபதியின் அரசியல் வாழ்விலே பங்கேற்பதைத் தடை செய்வதனைக் கருத்திற் கொண்டனர். அதிலிருந்து அவர்கள் மிகவும் விடாப்பிடியானவர்களாய் வளர்ந்தனர். குற்றச்செயல் செய்தமைக்கான சான்று இல்லாமலேயே தடைகளை அமுல்படுத்தும் அதேவேளையிலே ஆளும் கட்சியின் சிறந்தவர்களால் வெளியே இடம்பெறும் துஷ்பிரயோகங்களையும் உதாசீனம் செய்யும். கென்யாவிலே தொடர்ந்து இடம்பெற்றுவரும் முற்றுமான பரிசீலனை நிகழ்ச்சித் திட்டமானது அரசியல் விருப்பம் குறைவாக இருப்பதன் காரணமாக மிகவும் மந்தகதியிலே செயற்பட்டு வந்ததுடன், அது பாதுகாப்புத் துறையினர்களுக்குள் ஒருவித ஏக்கத்தை எழுப்பியது. மேலும், அரசியல் ஈடுபாடுகள் காரணமாக அதற்குள் வெளிப்படைத்தன்மையும் சுயாதீனமும் குறைவானதாகவே இடம்பெற்றது. உண்மையிலேயே முழுவதுமான பரிசீலனையானது திறன் மற்றும் பொருத்தப்பாடு ஆகிய அடித்தளமிட்டதாயும், தொழிற்தர்மம், செய்து எண்பித்தல், கட்டுப்பாட்டொழுங்கு, மனித உரிமைகள் பதிவுகளும் தராதரங்களும் ஆகியவற்றிலே மேற்கொள்ளப்பட வேண்டியதெனக் கருதப்பட்டது. இதற்குப் பதிலாக அதன் குவியநோக்கமானது செல்வச்செழிப்பு மற்றும் தனிநபர் நிதிவளம் போன்ற விடயங்களுக்கு நகர்ந்ததுடன், மெய்யான சேவைப் பதிவுகளுக்கு சொற்ப கரிசினையே வழங்கப்பட்டது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக சுரண்டல் பற்றிய குற்றச்சாட்டுகள் நிலவிவந்துள்ளன. இப்படியான எந்தச் சவால்களுக்கும் இலங்கை தடையாக இராது. இதற்கு மேலதிகமாக, பாதுகாப்புத் துறையினரின் மீள்சிரமைப்பு பற்றிய கோஷத்தையிட்ட பொதுமக்கள் உணர்வலைகள் மிகவும் எல்லைப்பட்டதாகவே உள்ளன.

மீள இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்குப் பாதுகாப்புத் துறையின் மீள்சீரமைப்புக்கு முழுமையான பரிசீலனையானது அவசியமானதோர் கூறு என்பதையிட்டு இருவேறு கருத்துக்கள் கிடையாது. இலங்கை அரசாங்கமானது அப்படியான ஒரு மீள்சீரமைப்பினை மேற்கொள்வதற்கும், அதனை உறுதிப்படுத்துவதற்கும் உறதிமொழியை வழங்கியுள்ளது என்பது உண்மை. வினைத்திறனில்லாத முழுமையான பரிசீலனையானது, தம்மைத் துஷ்பிரயோகித்து, தமது உரிமைகளை மீறியோர் பற்றிய பயம், பாதிக்கப்பட்டோர்களிலே தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்யும். அது கவனத்தில் கொள்ளப்படாவிட்டால், அந்த அச்சமானது உண்மைக்கும் நீதிக்குமான எந்த ஒரு செயன்முறைகளையும் தடம்புரளச் செய்திடக்கூடும்.

Published in Tamil

இலங்கை தேசிய ஒற்றுமைக்கும் நல்லுறவுக்குமான ஜனாதிபதி அலுவலகத்தின் ஒரு அங்கத்தவரான ராம் மாணிக்கலிங்கம் அண்மையில் ஒரு கட்டுரையிலே தமிழரின் சுயாட்சி பற்றிய விடயம் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தினுள் முறைப்படுத்தப்படும் வரைக்கும், திரளான குற்றச்செயல்களையிட்ட பொறுப்புக்கூறலை இலங்கை முன்னுரிமைப்படுத்தக்கூடாதெனவும், அத்துடன் மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் சர்வதேச ஆர்வலர்கள் ஏனைய நல்லுறவுக்கான வடிவங்களுக்கு மேலாக யுத்தக் குற்றச்செயல்கள் விசாரணைக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்த வேண்டும் எனவும் வாதித்துள்ளார்.

மாணிக்கலிங்கத்தின் கட்டுரையானது நிலைமாற்றுக்கால நீதிக்குள் திரும்பத்திரும்ப இடம்பெறும் இரு விவாதங்களைத் தொட்டுவரையப்பட்டது. அவை இரண்டுமே அந்தத் துறையைப்போலவே தொன்மை வாய்ந்தனவாகும். முதலாவது – சமாதானம் எதிர் நீதி எனும் வாதம். இரண்டாவது – நல்லுறவு தொடர்பான நடவடிக்கைகளின் ஒழுங்குதொடர் பற்றிய பிரச்சினை. அவரது கட்டுரையிலே யுத்தக் குற்றச்செயல்களுக்கான விசாரணைகளைவிட அரசியற்தீர்வே மிக முக்கியம் என்பதனால், அவைகளையிட்ட ஒழுங்குத்தொடரானது அரசியற்தீர்வுக்கு சலாக்கியத்தை வழங்குவதாயும் யுத்த குற்றச்செயல்களையிட்ட விசாரணையானது பின்பு இடம்பெறுவதாயும் இருக்கவேண்டும் என யோசனை தெரிவித்திருக்கிறார். இந்தக் கட்டுரையிலே தேசியப் பிரச்சினைக்கான அரசியற்தீர்வையும் குற்றச்செயல்களின் அட்டூழியத்துக்கான பொறுப்புக்கூறலையும அவர் இரண்டாகத் துருவப்படுத்தியிருப்பது பிழை என்பதையும், குற்றச்செயல்களின் அட்டூழியங்களை விசாரிக்கும் சட்டக் கட்டமைப்பின் நிர்மாணமானத்தை பின்னையதற்கு முன்னாக நிலைநாட்டுவது மேம்பட்ட உபாயமெனவும் கூற விழைகிறேன்.

இலங்கைத் தேசியப் பிரச்சினைக்கான அரசியற்தீர்வானது வழக்குத்தொடுத்தலுக்கும் விட முக்கியமானது எனும் வாதம் குறிப்பிட்ட அளவுக்கு உள்ளார்ந்த ரீதியிலே கவர்ச்சிகரமானதுதான். இருந்தாலுங்கூட, இப்படியான பகுப்பாய்வானது இனப்பிரச்சினைக்கு எண்ணெய் வார்க்கும் மோசமான குற்றச்செயல்களைப் புரிந்தவர்களைத் தண்டிக்கும் அதன் வகிபங்கைக் கவனத்திற் கொள்ளத் தவறுவதால், இது வெறும் மேலோட்டமானதே. சமத்துவத்துக்கான தமிழர் அரசியற் போராட்டமானது இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே இருந்து வந்துள்ளது; குறைந்தபட்சம் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தாவது அதற்கெதிராகப் பல்வேறு மட்டங்களிலே வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு அவை தண்டிக்கப்படாது விடப்பட்டமை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது. தண்டிக்கப்படாமல் விடப்பட்ட வன்முறை அத்தியாயங்கள் ஒவ்வொன்றுமே இன முறுகல்களுக்குப் புதிய எண்ணெய் வார்த்து இறுதியிலே இருதிறத்திலும் கட்டுப்பாடுமீறிய வன்முறைகளுக்கு இட்டுச்சென்றுள்ளது. 1983 இனப்படுகொலைகள் – இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு எந்த ஒரு இனத்துக்கும் எதிராக விடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என ஐயமின்றிக்கூறக்கூடியதான அவைகள் – ஒரு வாலிப புரட்சியைத் துரிதமாக முழு அளவிலான யுத்தமாக, பேரழிவையேற்படுத்தும் அளவுக்கு மாற்றியமைத்துவிட்டது. தண்டனையின்மையும் அதனால் விளைந்த வன்முறையும், அவை தண்டிக்கப்படாமையால் அத்தகைய வன்முறையானது எவ்வேளையிலும் பொறிதட்டப்படலாம் எனும் அச்சமுந்தான் சுயாட்சிக்கான கோரிக்கையின் இதயபீடமாய் அமைந்துள்ளது. இதனாலேதான் தமிழ் அரசியல்வாதிகள் பொலிஸ் அதிகாரங்களுக்கான உரிமையை வலியுறுத்தி வந்துள்ளனர்; தமது நிதிய மற்றும் பொருளாதார அதிகாரங்களுக்கு மேலாக, தமது சரீரகப் பாதுகாப்பின் மீதான கட்டுப்பாடானது சரியாகவோ அல்லது தப்பாகவோ மிகவும் அவசரமானதும் அத்தியாவசியமானதுமான கரிசனையாக அவர்களால் கணிக்கப்படுகிறது. எனவே, தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவராமல் தேசியப்பிரச்சினைக்கு உண்மையான தீர்வு இருக்கமுடியாது. இனப்பிரச்சினைக்கு பொறுப்புக்கூறாத அதிகாரப்பகிர்வு மாத்திரமே சர்வநிவாரணி எனும் எடுகோளானது, சுயாட்சிக்கான கோரிக்கைகளுடன் திரட்சியான குற்றறச்செயல்களுக்கான தண்டனையின்மையானது இரண்டறக் கலந்துள்ளது எனும் நிஜத்தைப் புறக்கணிப்பதுடன், இன்னுமொரு பரந்தளவிலான அட்டூழியத்தைக் கட்டுப்படுத்த இயலாத அரசியலுக்கு வழிவகுத்து, இனங்களிடையேயான சகவாழ்வுக்கான சாத்தியங்கள் எதனையும் நிரந்தரமாகப் பாதித்தும் விடக்கூடும்.

மாணிக்கலிங்கத்தின் கட்டுரையானது இலங்கையின் இனப்பிரச்சினையின் மூலாதார இயக்கசக்தியையும் புறக்கணிப்பதாக உள்ளது. தேசியத் தலைவர்களால் முறித்துப்போடப்பட்ட வாக்குறுதிகளின் சம்பவக்கோர்வைகள் தமிழ் அரசியலின் உணர்வலைகளின் இதயபீடத்திலே கசிந்துள்ளது. இந்தப் பின்புலத்திலே, பொறுப்புக்கூறல் பற்றி இலங்கை வழங்கிய மேலும் ஓர் வாக்குறுதியை இலங்கை அரசு கனப்படுத்தத் தவறும்பட்சத்திலே, அது இன நம்பிக்கையீனத்துக்கு மேலும் பங்களிப்புச்செய்வதாக ஆகிவிடும். பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் ஆகியவை அடுத்தடுத்து வந்த அரசுகளால் ஒருதலைப்பட்சமாக தூக்கியெறியப்பட்டது மட்டுமன்றி தொடர்ந்த கால ஓட்டத்திலே மேலும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையானது இலங்கையின் இனப்பிரச்சினைகள் பற்றிய எந்த ஒரு பக்கச்சசார்பற்ற கணிப்பிலும் பூதாகாரமாகித் தெரிகிறதாய் உள்ளது. அதேபோல, கடந்த ஒக்டோபர் 2015 இலே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலே தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளதான, பொறுப்புக்கூறுதலுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பானது, இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட அட்டூழியங்களுடன் எப்படி இடைப்படுவது என்பதிலே அரசுக்கும் தமிழ் அரசியற் தலைவர்களுக்கும் இடையே அரசியல் இசைவுக்காக அடித்தளத்தை அமைத்துள்ளது. தமிழ் மக்களிடையே தீவிரப்போக்கான ஒரு சாராரின் கடும் எதிர்ப்பு நிலவினாலுங்கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது பணயப்பங்காளிகளுடன் ஜெனீவாத் தீர்மானத்திலே ஒரு சில கூர்மிய திருத்தங்களைச் செய்யும் விடயத்தையிட்டுக் கலந்துரையாடி, அத்திருத்திய தீர்மானம் பேரவையிலே நிறைவேற்றப்படுவதற்குத் தனது ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. அதுமுதற்கொண்டு அந்தத் தீர்மானமானது வெறுமனே சர்வதேச சமூகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தமாக மாத்திரமன்றி, இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே அதேயளவுக்கு முக்கியமானதாக இருக்கிறதாகக் கூட்டமைப்பு கோரியும் வந்துள்ளது. அந்த அடிப்படையிலேயே, அந்தத் தீர்மானத்தின் நிபந்தனைகளை முற்றாக அமுல்படுத்தும்படியாக அது கூறிவந்துமுள்ளது. இந்த ஒப்பந்தம் இப்போது தடம்புரளச் செய்யப்பட்டால், ஜெனீவா தீர்மானங்களைக் கைவிட்டமையானது ஒரு காலத்திலே அன்றைய பண்டா – செல்வா மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் மீறப்பட்டமையைப் பற்றி எழுந்த அதே கசப்புடனேயே அவர்களால் நினைவுகூரப்படலாம்.

எனவே, குறிப்பாக இலங்கையின் இனப்பூசலின் குறிப்பான ஏதுக்களின்படி, அதிகாரப் பகிர்வுப் பிரச்சினையை பொறுப்புக்கூறுதலைவிட வேறுபட்டதாகக் கருதுவதானது பிரச்சினையானதாக அமைந்துள்ளது. தேசியப் பிரச்சினையின் இதயபீடத்திலே உள்ள எந்த ஒரு சரித்திரப் பிரச்சினையையும் நிவிர்த்திசெய்ய எடுக்கப்படும் எந்த ஒரு அர்த்தமுள்ள முயற்சியும் திரண்ட அட்டூழியங்களுக்கு நிலவும் தண்டனையின்மையானது முடிவுக்குக் கொண்டுவரப்படுவதை உறுதிசெய்வதுடன், பரஸ்பரம் இணக்கம் காணப்பட்டவைகள் கனப்படுத்தப்படுவதாயும் இருக்க வேண்டும். இதற்கு இலங்கை இணை ஆதரவு வழங்கிய ஜெனிவா தீர்மானத்திலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளிலே அட்டூழியக் குற்றச்செயல்களுக்கு அர்த்தமுள்ள பொறுப்புக்கூறுதலின் ஒரு வடிவம் இருக்கவேண்டியது முன்தேவையானதாகும்.

மாணிக்கலிங்கத்துடன் ஒருவர் இணங்காதுபோனாலும், நானும் கூறுவதுபோல அரசியற் தீர்வும் பொறுப்புக்கூறலும் இரண்டறக் கலந்தவை என வலியுறுத்தினாலுங்கூட, பொறுப்புக்கூறலானது அரசியற்சட்டச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்தே இடம்பெறவேண்டும் எனும் நிகழ்ச்சிநிரலை அவர் பரிந்துரைப்பதானது நாம் கவனத்தைச் செலுத்தவேண்டிய அம்சமாக உள்ளது. நிலைமாற்றுக்கால நீதியின் செயன்முறைகளை ஒழுங்குநிரைப்படுத்துவதென்பது சட்டபூர்வமானதும் பல்வேறான நிலைமாற்றுக்கால நீதி இலக்குகளை நோக்கியதாக அவை பரந்தளவிலே பாவிக்கப்படும் ஒரு உபாயமாகவும் இருந்துவருகிறது. 1980கள் மற்றும் 90களிலே லத்தீன் அமெரிக்காவின் வலதுசாரிச் சர்வாதிகாரத்தினர் அச்சுறுத்தலூடாக மன்னிப்புச் சட்டங்களின் மரபை விட்டுப்போனமை அல்லது புதிய அரசின் மீது அப்படியான சட்டங்களைத் திணித்தமையின் பின்புலத்திலே அதன் நிலைமாற்றுக்கால நீதியின் உண்மை அறியும் ஆணைக்குழுக்கள் குற்றச்செயல்களுக்கான சான்றுகளை புட்டுக்காட்டுவதற்கும், முன்னைய அடக்குமுறை ஆட்சிகளை அகௌரவப்படுத்தவும் முடிவிலே அவர்களை விசாரணைக்கு இட்டுச்செல்லவும் வழிகோலியது. மிக அண்மித்த காலங்களிலோ பல நாடுகள் வழக்கு விசாரணைகள் மற்றும் உண்மை அறியும் ஆணைக்குழு ஆகிய இரண்டையுமே சமகாலத்திலே இணைந்து இடம்பெறுவதையே விரும்பியுள்ளன.

இலங்கையிலே சிலீ நாட்டைப்போல மேற்கொள்வதற்கு எந்த ஒரு மன்னிப்புச் சட்டமும் இல்லை; அத்துடன், ஆர்ஜென்டீனாவைப்போல ஒரு இராணுவப்புரட்சிக்கான வாய்ப்புகளும் இல்லை. மாறாக, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ள ஒரு அரசாங்கம் – நலிந்ததாக இருந்தாலுங்கூட – அதன் தேர்தல் விஞ்ஞாபனத்திலே போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்கள் தேசிய சுயாதீன நீதிப்பொறிமுறையால் கையாளப்படும் என வழங்கிய வாக்குறுதிகளூடாக ஆட்சியைப் பிடித்தது. எந்தச் செயன்முறை மேம்பட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது எனும் கேள்வியைவிட இலங்கைக்கான மேலானதான உபாயக் கேள்வி எதுவெனில், எடுக்கவுள்ள செயன்முறைகளின் எந்த நிகச்ழ்சி நிரையானது அதன் விளைவீடுகளை உச்சபட்சமாக்கும் என்பதே. இதனை மனதிற்கொண்டுதான் நான் ஒரு உபாய எண்ணமாக, புதிய அரசியற்சட்டம் நாடாளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட பின்பாக அல்லாமல் அதற்கு முன்னதாக பிரதம மந்திரி பரிந்துரைத்துள்ளதுபோலவே 2016இன் நடுப்பகுதியிலே ஒரு சட்டக் கட்டமைப்பைச் சீக்கிரமாக நிலைநாட்டுவதையே ஆதரிக்கிறேன்.

முதலாவதாக, அதிகாரப் பகிர்வுடன் இடைப்படும் ஒரு புதிய அரசியற் சட்டமானது எவ்வகையிலும் முன்கூட்டிய தீர்மானமாக அமைந்துவிடாது; அரசியற் சீர்திருத்தச்சபையை நிலைநாட்டுவதிலே உள்ள செயன்முறைகள் போன்றவற்றிலேயே இடம்பெற்றுவரும் தாமதங்களையும் இழுபறிகளையும் பார்க்கையிலே, பொறுப்புக்கூறுவதை அரசியற்சட்டம் நிலைநாட்டப்படும்வரைக்கும் தரித்துநிறுத்திவைப்பதென்பது, அது எந்தக்காலத்திலுமே கருத்திற்கொள்ளப்படாமல் போவதற்கான சாத்தியங்களையே கூடுதலாகக் கொண்டுள்ளதெனலாம். நிலைமாற்றுக்கால நீதி நீண்டகாலம் எடுக்கும், ஆனாலும் இறுக்கமான தீர்மானங்களை அரசாங்கத்தின் அரசியல் முதலீடு உயர்வாகவும் அதனைத் தூற்றுவோர் மிகவும் பலவீனமாகவும் இருக்கும் “நிலைமாற்றுக்காலத் தருணங்களிலே” எடுப்பதுதான் உள்ளதுக்குள் மிகவும் இலகுவானது.

அரசியலமைப்புச்சட்ட சீர்திருத்தங்களைப்போல அல்லாது, பொறுப்புக்கூறலுக்கான புதிய சட்டமூலங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோ அல்லது பொதுஜனவாக்கெடுப்போ தேவையில்லை. இத்தப் பின்புலத்திலே, இயலுமான வேளையிலே வெற்றியைப் பெற்றுக்கொள்ள நாடும் ஞானம் நல்லதாகவே இருக்கும். சரித்திரபூர்மான ஆட்சிமாற்றம் இடம்பெற்று பதினாங்கு மாதங்கள் கடந்துவிட்டுள்ள நிலைமையிலே, நிலைமாற்றுக்கால நீதிக்கான சாரளங்கள் மூடப்பட ஆரம்பித்துவிட்டதுடன், நீதிப்பொறிமுறைகளை நிலைநாட்டுவதிலே உள்ள அரசியற் கஷ்டங்களும் தொடர்ச்சியாக அதிகரித்தவண்ணமே உள்ளன. இன்றிலிருந்து ஒருவருட காலத்துக்குள் பொறுப்புக்கூறல் விடயத்திலோ அல்லது சட்டச்சீர்திருத்தத்திலோ இலங்கை எவ்வித முன்னேற்றத்தையும் அடைந்திராவிட்டால் தமிழ் அரசியலின் தொனியும் தோரணையும் அதிகரித்த விரக்தியாகவும், கூர்மையான பேச்சுக்களாயும் நகர்ந்திடத்தொடங்கும். தமிழ் மிதவாதிகள் தள்ளப்பட்டுப்போவார்களேயானால், தமிழ்த் தீவிரத் தேசியத்தினர் தமது சிங்கள சகபாடிகளுக்கு இனப்பூசலை விளாசி எரியப்பண்ண வேண்டிய அளவு எண்ணையை வழங்குவதுடன், சிங்கள மிதவாதிகளின் பிடியை முடிவுக்குக் கொண்டுவரவும் வழிவகுக்கும்.

ஆனாலும், போர்க்குற்றச்செயல்களுக்கான வழக்குவிசாரணைகளுக்கான சர்ச்சைக்குரிய சட்டங்களை நிறைவேற்றும்போது அது அரசியற் தீர்வுக்கென உள்ள அரசியல் முதலீட்டினைக் குறைத்துப்போட மாட்டாதா எனச் சில கண்டன விமர்சகர்கள் கேட்கக்கூடும். தெளிவுபடுத்துவதிலே அரசுக்கு உள்ள குறைபாடும், அது நாடும் நீதிப் பொறிமுறையைப் பற்றிய அதன் செய்திகளும் எப்படிப்பார்த்தாலும் ஒரு அரசியற் செலவைப் பிழிந்தெடுப்பதுடன், சிங்கள பேரினவாதிகள் எதிர்காலத்து நீதிமன்றங்கள் பற்றிய செய்திகளைக் கட்டுப்படுத்த இடங்கொடுத்து இராணுவத்துக்கு எதிரான வேட்டையாடல் இடம்பெறப்போகிறதெனும் நியாயமற்ற அச்சங்களை மக்களிலே எழுப்பவும் வழிவகுத்துவிடுகிறது. மாணிக்கலிங்கம் கூறுவதுபோல பொறுப்புக்கூறுதல் விடயத்தை அரசு பிற்காலத்துக்காகத் தரித்துநிறுத்தி வைத்திருக்குமேயாயின், இப்படியான போக்கு மேலும் அதிகரித்து செறிவடையவும் கூடும். இந்த நிலைமைக்கான ஒரு மாற்று மருந்து எதுவெனில், அரசு தான் செய்யப்போவதைப் பற்றி மிகத் தெளிவாக இருப்பதுடன், தாமதிக்காமல் அவசியமான பொறிமுறைகளை நிலைநாட்டுவதே. ஒரு உணர்வுள்ள வழக்குரைஞர் வழக்குத் தாக்கல் செய்யும் கொள்கைகளைத் தெளிவுபடுத்துவதால், அதிர்ச்சியூட்டும் சிலவகைக் குற்றச்செயல்களுடன் சம்பந்தப்படாதவர்கள் மத்தியிலே அதுபற்றி நிலவும் அச்சங்களை நிவிர்த்திசெய்ய உதவலாம். செயற்படத் தவறி, ஒருவித அசமந்தப் போக்கினை நீடித்தால், அரசு சம்பவ நிகழ்வையும், ஆதரவையும் இழந்துபோகக்கூடிய இடராபத்தை எதிர்நோக்கியிருக்கும். பொறுப்புக்கூறலை எதிர்காலத்துக்காகத் தரித்து நிறுத்திவைக்கும் உபாயம் பிரச்சினைகளை வரத்திக்கவும் அச்சங்களைப் பெருக்கவுமே வழிவகுக்கும்.

மேற்படியான காரணங்களினிமித்தமாக, உபாயரீதியான கருதுகோள்கள் சர்வதேசக் குற்றச்செயல்களை விசாரித்து வழக்குத்தொடுப்பதற்கு அரசாங்கம் துரிதமாக வேண்டிய சட்டக் கட்டமைப்பினை உருவாக்குவதை கோரிக்கையாக விடுக்கிறதென நான் கருதுகிறேன். அதன் பக்கத்திலே தீர்க்கமான தீர்மானங்களை இது வேண்டிநிற்கிறது. அவர்கள் பலவீனத்தையும் தைரியமற்ற அச்சத்தையும் புலப்படுத்துவார்களேயாயின், நேற்றைய நாளின் பலவான்களின் கோரிக்கைகள் தொடர்ந்தும் வளரும்.

Accountability and a Political Solution: A Response to Ram Manikkalingam என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.

Published in Tamil

இலங்கை பற்றி வெளியிடப்பட்ட ஐ.நா. விசாரணை அறிக்கையானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தருவிப்பதாய் உள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலே உயர்ஸ்தானிகர் செயிட்டால் ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டபோது நான் மனித உரிமைகள் பேரவையிலே பிரசன்னமாகியிருந்தேன். இலங்கைக்கு எதிராக வலிமையான ஒரு பிரேரணைக்கு இலங்கையை இணங்கச்செய்ய அழுத்தம் கொடுக்கும்படி நாடுகளிடையே பரப்புரை செய்யும்படியாக பிரசன்னமாகியிருந்த பாதிக்கப்பட்டோர்களிடையே பெருகிய உணர்வலைகள் வெற்றியையும் ஆறுதலையும் விளைவாக்கியது; சுவாசத்தையும் வழங்கியது. இறுதியாக அவர்களது ஆறாத்துன்ப துயரங்கள் அங்கீகரிக்கப்பெற்றதுடன், அதற்கான தீர்வும் கண்தொலைதூரத்துள் வந்துவிட்டது. மிகவும் முக்கியமாக உயர் ஸ்தானிகரின் அறிக்கையானது இலங்கையின் உள்ளகப் பொறிமுறையானது நம்பக்கூடியதல்ல என்பதையும் நீதியை உறுதிப்படுத்தும் தகைமை அதற்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கின்றது. இதனாலேதான் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் மற்றும் வழக்குத்தொடுப்போர் உள்ளடங்கியதான ஒரு கலப்பு நீதிமன்றத்தை உயர் ஸ்தானிகர் பரிந்துரைத்துள்ளார். வெளியுறவு அமைச்சரான மங்கள சமரவீர பேரவையிலே ஆற்றிய உரையும் தமிழ் மக்களைச் சென்றடைந்தது. அவர் கடந்த காலத்துத் தவறுகளைப் பற்றியும், தமிழ் மக்களின் மனக்குறைகளுக்கு ஒரு அரசியற்தீர்வின் அவசியத்தைப் பற்றியும் பேசியிருந்தார். இதுவரைக்கும் அரசு இந்த அறிக்கையை உத்தியோகபூர்வமாக நிராகரிக்கவில்லை. இப்படியான விருத்தியாக்கங்கள் யாவும் முன்னேற்றங்கலாகவே கருதப்படவேண்டும்.

விரைவிலே ஏற்றுக்கொள்ளப்படவுள்ள பிரேரணை பற்றி அரசு எடுத்துள்ள தீவிர நிலைப்பாட்டினால் இந்த முன்னேற்றங்கள் சவாலிடப்பட்டுள்ளது. இப்படியான ஒரு நிலைப்பாடானது வெளியுறவு அமைச்சரின் உரைக்கு அமைவற்றதாக இருப்பதாகவே தென்படுகிறது. ஆயினும், இந்த நிலைப்பாடானது அரசின் உத்தியோகபூர்வ கொள்கையைப் பிரதிபலிக்காமல், அதன் பேரம் பேசும் ஒரு யுக்தியாக இருந்திருக்கக்கூடும். எது எவ்வாறிருப்பினும், ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டவர்களுக்கு, இறுதியிலே ஏற்றுக்கொள்ளப்படவுள்ள தீர்மானமானது வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் மற்றும் வழக்குத் தொடுப்போர்கள் பற்றிய குறிப்புக்களை உள்ளடக்கியதாகவே இருக்கும் என்பது தெளிவு. இது நிறைவேற்றப்படுமேயாயின், போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் போன்றவற்றுக்கான நீதியெனும் முக்கியமான மைல்கல்லாக, இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம் எய்தப்பட்டிராததான ஒரு மைல்கல்லாக அது இருக்கும். இந்தத் தீர்மானத்திலே ஏனைய பகுதிகள் ஒருவேளை பலவீனப்படுத்தப்பட்டாலுங்கூட, மிகவும் முக்கியமான பகுதி, சர்வசேத நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களின் பங்கேற்பாகும். வெற்றி கைக்கெட்டிய தொலைவிலேயே உள்ளது. அது எய்தப்படுவதை உறதிப்படுத்தும்படியாக நாம் கடினமாக உழைக்கவேண்டும்.

இந்த அறிக்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய செய்திகள் என்ன? முதலாவது, ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஆனாலும் கொள்கைப்படியான செயற்பாடானது நடைமுறைச்சாத்தியமற்ற காரியங்களைக் கோருவதைவிட மேலானது. ஒரு சிலர் அதாவது ஆள்மனதிலே ஊறுபடுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு நெருக்கமான சில செயற்பாட்டாளர்களும் அரசியல்வாதிகளும் நடைமுறைச்சாத்தியமற்ற கோரிக்கைகளை விடுக்கும்போது தமது எதிர்பார்ப்பு மட்டங்களையும் உயர்த்திக் கொள்வதுண்டு. உதாரணமாக, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை அனுப்பும்படியான கோரிக்கைய முன்வைத்து அதற்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துச் சேகரிக்கும் பிரச்சாரமானது, நீதியை எய்துவதிலே ஒரு துளி பங்களிப்புத்தன்னும் செய்யவில்லை. ஆனால், அது பாதிக்கப்பட்ட பாமரர்களிடையே எதிர்பார்ப்பை உயர்த்தி, அவர்களை எப்போதுமே மனமடியச்செய்வதையே சாத்தித்தது. பாதிக்கப்பட்டவர்களை நிரந்தரமாக மனமடிவுற்ற நிலைமையிலே வைத்திருப்பது ஒருசில அரசியல்வாதிகளுக்கு நன்மை பயப்பதாக இருக்கக்கூடும். ஆயினும், பல்வேறு கட்டுரைவாயிலாக நான் சுட்டிக்காட்டிதைப்போன்று, பாதிகப்பட்டவர்கள் மற்றும் பாதிப்புற்றோர் சமூகங்கள் தமது நம்பிக்கைகளைத் தளரவிடாமல், நீதிக்கான செயலாற்றங்களிலே ஈடுபடும் அவர்களது இயல்பாற்றல்தான் இறுதியிலே நீதியை எய்திட உதவிசெய்யுயம். போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் போன்றவற்றுக்கான நீதி ஈற்றிலே எய்தப்பெற்ற பல நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் அதுதான். நீண்டகால விளையாட்டிலே (ஆங்கிலத்திலே “long game”) விளையாடும் ஆற்றலானது தவறான எதிர்பார்ப்புக்களைத் தொடர்ச்சியாக உருவாக்குவதால் குழிபறிக்கப்படுவதுடன், ஏமாற்றத்தை விளைவிப்பதாயும் இருக்கும். நீதியை எய்தும்படிக்கு எமது சமூகம் இந்தப் போக்குக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ளவேண்டும். கலப்புநீதிமன்றம் எய்தப்படக்கூடிய ஒன்று என்பதை நான் எப்போதுமே நிலைநாட்டி வந்திருக்கிறேன். அது இலகுவாயிராது என்றும், நாம் கடினமாக உழைத்தால் அதனை எய்தலாம் என்றும் நான் கூறிவந்திருக்கிறேன். பலமாத காலமாக இடம்பெற்றுவந்த பரப்புரைகளும், கடின உழைப்புக்களும் இன்று பலனளித்துள்ளது. இன்றும் சில நாட்களுக்குள், சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களைக் கொண்டிருப்பதற்கு இலங்கை இறுதியாக இணங்குமா இல்லையா என்பதை நாம் அறியவருவோம். அவர்கள் இணங்கினார்களேயானால், பாதிக்கப்பட்ட பொதுமக்களை தவறாக வழிநடாத்த மறுத்து, நீதியையும் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளையும் நோக்காகக் கொண்டு ஆக்கபூர்வமாகப் பணியாற்றிய சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களினதும் அரசியல்வாதிகளினதும் பதிலீடுகளுக்கான ஒரு நற்சான்றாக அமையும். முன்னர் கலப்பு நீதிமன்றம் பற்றிய எமது நிலைப்பாட்டைக் கண்டித்து விமர்சித்தவர்களுங்கூட இன்று உயர் ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்றது மட்டுமன்றி, அந்தக் கலப்புநீதிமன்றம் எப்படி இயங்கவேண்டும் என்பதைப்பற்றிப் பேசிவருகின்றனர். இது ஒரு முன்னேற்றகரமான விடயமாக இருப்பதால் அதனை நாம் வரவேற்றிடவேண்டும்.

அறிக்கையிலே ஆர்வத்தையூட்டும் இன்னும் ஒரு விடயந்தான் இன அழிப்புப் பற்றியதாகும். இன அழிப்புப் பற்றிய எந்த ஒரு கண்டுபிடிப்பையும் இந்த அறிக்கை கொண்டிருக்கவில்லை. ஆயினும், உயர்ஸ்தானிகர் நடாத்திய ஊடக மாநாட்டின்போது அவரிடம் இன அழித்தொழிப்புப் பற்றிய குறிப்பான கேள்வி கேட்கப்பட்டது. சுமார் 3000 கூற்றுக்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், ‘சட்டலைட்’ படங்கள் போன்றவை உள்ளிட்டதாக உயர் ஸ்தானிகரிடம் ஏற்கெனவே உள்ள சான்றுகளின் அடிப்படையிலே அவர் ஒரு இன அழிப்பு இடம்பெற்றுள்ளது எனும் முடிவுக்குத் தன்னால் முடிவுசெய்ய இயலாதிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயினும், எதிர்காலத்திலே போதிய சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில், இன அழிப்பு இடம்பெற்றிருப்பதை நீரூபித்திட கூடும் என்றும் கூறியுள்ளார். பொறுப்புவாய்ந்த தமிழ் பரிந்துரைப்பாளர்களும், அரசியல்வாதிகளும் கூறிவந்துள்ள நிலைப்பாடாகவும் இது உள்ளது.

உயர்ஸ்தானிகரின் அறிக்கையானது இன அழிப்பு நிகழ்ந்தா? இல்லையா? எனும் விசாரணையை நிகழ்த்தாமலும் இருந்துள்ளமை அதிர்ஷ்டவசமானதே. ஒருவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் மற்றும் ஒருசிலரின் ஆலோசனையைக் கருந்திற் கொண்டு, உள்ள சான்றுகளின் அடிப்படையிலே இன அழிப்பு நிகழ்ந்தா இல்லையா எனும் விசாரணையை ஐ.நா. மேற்கொண்டிருந்தால் இன அழிப்பு நிகழ்ந்திருக்கவில்லை எனும் பதிலை உயர்ஸ்தானிகர் கூறியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். அப்படியான ஒரு தீர்மானமானது தமிழ் மக்களுக்கு எதிர்மறையான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். சகல சர்வதேச ஊடகங்களிலும் தலைப்புச்செய்தியாக, இலங்கையிலே மோசமான குற்றச்செயல்கள் இழைக்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டும் தற்போதைய செய்திகளுக்குப் பதிலாக, “இலங்கையிலே இன அழிப்பு நிகழவில்லை” என்பது வெளிவந்திருக்கும்.

ஞாபகத்திலே கொள்ளவேண்டிய மூன்றாவது முக்கியமான குறிப்பு. எதுவெனில், அறிக்கையானது விடுதலை புலிகளினால் இழைக்கப்பட்ட, வலயன்மடம் கோயிலில் தஞ்சம் கோரிவந்த நூற்றுக்கணக்கான பிள்ளைகளைக் கடத்தியது உள்ளிட்டதான, மோசமான குற்றச்செயல்கள் பற்றியும் கூறியுள்ளது. எழிலனும் இளம்பரிதியும் அவ்வகையிலே மோசமான கண்டனத்துக்குரியவர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த உண்மைகளைச் சமூகமாக நாம் நேர்மையாக அணுகவேண்டும். எமது பெயரின் கீழ் குற்றச்செயல்கள் இழைக்கப்பட்டுள்ளன; அவை எமது மக்கள் மீது இழைக்கப்பட்டதாலும் அவை நடந்தது என்பதை நாம் அறிந்துள்ளதாலும் அவற்றை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அறிக்கை சுட்டிக்காட்டுவதுபோல, குற்றச்செயல்களை இயக்கம் இழைத்துள்ளது என நிரூபித்துள்ளமையானது அரசை மன்னிப்பதாக அர்த்தம் பெறாது. எமக்கு இந்தப் பயம் இருக்கவேண்டியதில்லை. எம்மவர்களால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை நாம் ஏற்றுக்கொள்ளும்போதுதான், நாம் இராணுவத்துக்கும் அரசுக்கும் எதிராக குற்றம் சுமத்தும்போது அது மதிப்பைப் பெறும். நேர்மையிலே வெற்றி உண்டு.

நீதிக்கான எமது தாகத்திலே நீண்ட ஒரு பயணத்தின் ஒரு கட்டத்தின் இறுதிப்படியை நாம் அணுகி, புதிய ஒரு கட்டத்துக்குள் நாம் செல்லும்போது, நாம் கடந்தகாலத்துப் பாடங்களை நினைவுக்குக் கொண்டுவருவோமாக. கருத்துள்ள, பொறுப்புள்ள, நேர்மையான செயற்பாடுகள்தான் எமது போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல அவசியமானவைகளாகும். அந்தப் பாதையிலேயே நாம் தொடர்ந்து தடம்பதிப்போமாக.

நிறான் அங்கிற்றல்

Published in Tamil

இலங்கை மீதான ஐக்கிய நாடுகளால் நடாத்தப்பட்ட சர்வதேச விசாரணையின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. போரின்போது இரு தரப்பினராலும், போரின் பின்பு அரசாலும் இழைக்கப்பட்ட அநீதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அறிக்கை வெளியீடு ஒரு மாபெரும் வெற்றி. இருந்தாலுங்கூட, நடந்த அநியாயங்களிற்கான பொறுப்புக்கூறல் என்ற விடயத்திலே தமிழ் மக்கள் மத்தியிலே இன்று பெரும் குழப்பநிலை தோன்றியிருக்கின்றது. இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிகாரிகளான நிஷா பிஷ்வால் மற்றும் டொம் மலினொஸ்கி ஆகிய இருவரும் விடுத்திருந்த கருத்துக்களைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா தற்போது தமிழர்களைக் கைகழுவிவிட்டு, முழுமையான உள்ளூர் விசாரணைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கருதும் உணர்வலைகள் பரவலாக எழுந்துள்ளன. இந்த விஜயங்களின் பால் அமெரிக்காவின் நிலைப்பாட்டிலே மாற்றம் எற்பட்டிருப்பதாக மக்களுக்குத் தோன்றியதால் பல தமிழர்கள் சர்வதேச விசாரணையைத் தொடர்ந்தும் கோரிவருகின்றனர்.

மறுபக்கத்தில் சில தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேச மயப்படுத்தப்பட்ட உள்நாட்டுப் பொறிமுறையொன்றின் அவசியம் பற்றிப் பேசி வருகின்றனர். நான் கூட நீதி வேண்டிய பொறிமுறைகள் இலங்கைக்குள்ளானவையாக இருப்பது அத்தியாவசியம் என்று வாதித்து விளக்கியிருந்தேன். மேலும், ஏற்கனவே ஒரு சர்வதேச விசாரணை நடந்து முடிவடைந்துவிட்டதால் மீண்டுமொரு சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்பதும், நடந்து முடிந்திருக்கும் சர்வதேச விசாரணையின் பரிந்துரைகள் இலங்கை அரசாலும், சர்வதேச சமூகத்தாலும் உள்வாங்கப்பட்டு அவை இரு தரப்பாலும் அமுல்படுத்தப்படுத்துவதே இன்றைய தேவை என்ற கருத்தும் பரவலாகச் சொல்லப்படுகின்ற விடயம்.

இதனால், இன்று தமிழ் மக்களது மனங்களிலே அதிக குழப்பம் நிலவுகிறது. அடிக்கடி ஜெனீவாவுக்குச் சென்றுவந்த சட்டத்தரணிகளாலும் அரசியல்வாதிகளாலும் இணக்கப்பாட்டுக்கு வரவில்லையெனில், என்ன நடக்கிறது என்பதைப் பொது மக்களால் எப்படி முழுமையாக விளங்கிக்கொள்ளமுடியும்? ஆனாலும், வழமையான உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளால் எந்தப் பயனும் இல்லை என்ற ஒரு விடயத்தில் மக்கள் மிகத்தெளிவாக உள்ளனர். எனவே, இலங்கையின் நீதித் துறைக் கட்டமைப்பானது செயற்படும் விதத்திலே முழுமையான மாற்றம் இடம்பெறவேண்டும் என்பதுடன், நீதியை நிலை நாட்ட நிறுவப்படும் பொறிமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் சர்வதேசப் பங்களிப்பும் அவசியம் இருக்கவேண்டும். ஆனால், இந்தச் சர்வதேசப் பங்களிப்பு என்ன? நாம் பேசும் இந்தச் சர்வதேசப் பங்களிப்பு எத்தகையது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாடி நாம் கம்போடியா, சீரா லியோன் போன்ற நாடுகளைக் கருத்திற் கொள்ளலாம். அங்கெல்லாம் சர்வதேச நீதிபதிகள் உள்ளூர் நீதிபதிகளுடன் வழக்கு விசாரித்தனர். மேலும், வழக்குகள் சர்வதேசச் சட்டத்தின் பிரகாரம் விசரரிக்கப்பட்டன. மேலும், அந்த நீதிமன்றங்களிலே பங்கேற்ற சட்டத்தரணிகளுள் அரைவாசிப்பேர் வெளிநாட்டவர் மீதி உள்ளூர் சட்டத்தரணிகள். இத்தகைய சர்வதேச வகிபாகம் மாத்திரமே நிறுவப்படும் நீதிப் பொறிமுறை மீது பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

சர்வதேச விசாரணை அல்லது பொறிமுறை மாத்திரமே வேண்டும் என்று கோருவோருக்கிடையே கூட பெருத்த குழப்பம் இருக்கின்றது. சர்வதேச விசாரணை என்பதன் அர்த்தம் யாது? தற்போதைய சூழ்நிலையிலே சர்வதேச விசாரணையால் எதிர்பார்க்கப்படுவது என்ன? என்ற விடயங்களைப் பற்றிப் பேசாமல் வெறுமனே ‘சர்வதேச விசாரணை’ என்ற பதத்தினை மாத்திரம் இந்தத் தரப்பு வலிந்துரைத்து வருவதால் இவர்களிடையே நிலவும் குழப்பங்கள் வெளியிற் தெரிவதில்லை. ஜெனீவாவிலே ஏற்கெனவே இடம்பெற்றது சர்வதேச விசாரணை என்பதும் இன்னொரு முறை அதை மீளச் செய்வது அனாவசியமானது என்பதும் தெளிவு. சர்வதேச விசாரணையை மீண்டும் செய்வதல்ல, நடந்தேறிய சர்வதேச விசாரணையை முன்னெடுத்துச்செல்வதே தற்போதைய தேவை. ஆகவே, இன்று கோரப்படும் சர்வதேச விசாரணை யாது? அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கை பாரதீனப்படுத்தப்படுவதா? அல்லது அது ருவாண்டா மற்றும் யூகோஸ்லாவியா போன்ற நாடுகளிலே உருவாக்கப்பட்ட நீதிமன்றங்களை ஒத்த பொறிமுறையா? நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியதைப்போல, இந்த இரு தெரிவுகளும் நடைமுறைச் சாத்தியமற்றவை. மேலும், அவை பாதிக்கப்பட்ட மக்களது தேவைகளைச் சந்திக்க வலுவற்றவை. உதாரணமாக, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலே நடைபெறும் இரண்டு அல்லது மூன்று வழக்குகளால் (பொதுவாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒரு நாட்டிலிருந்து ஒரு சிலர் மீதே வழக்குத் தொடர்வது வழக்கம்) எமது காணாமற்போன பிள்ளைகள் திரும்பிக் கிடைப்பதோ, நாம் இழந்த நிலங்கள் எமக்கு மீளக் கையளிக்கப்படுவதோ அல்லது நாட்டில் நிலவும் சட்ட ஒழுங்கின்மை சீராக்கப்படுவதோ நடைபெறப் போவதில்லை.

சர்வதேசக் கட்டமைப்பும், சர்வதேசச் சட்டமும் குற்றச்செயல்கள் இடம்பெற்ற நாடுகள் அவற்றை விசாரிக்க மறுக்கும் போது மாத்திரமே ஒரு சர்வதேச நீதிமன்றத்தை அமைக்க வழி செய்யும். இருப்பினும், காணாமற்போனோரைக் கண்டறிதல் பாதிக்கப்பட்டோருக்குப் பரிகாரம் மற்றும் நட்ட ஈடு என்பவற்றை வழங்கல் என்ற தேவைகளைப் பூர்த்தி செய்யும் முழுமையான சர்வதேசப் பொறிமுறை இதுவரை இருந்ததில்லை. குறித்த நாட்டின் அரசின் உடன்பாட்டுடன் நிறுவப்படும் சர்வதேச வகிபாகத்துடன் கூடிய உள்ளகப் பொறிமுறையால் மாத்திரமே மேற்கண்ட தேவைகளைச் சந்திக்க முடியும்.

பொது மக்களும், பாதிக்கப்பட்டோரும் இவற்றைப் புரிந்துகொள்வதில்லை. சர்வதேச விசாரணை என்று கூறும் போது சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்குள் வந்து, தம்மை விசாரித்து, ஆதாரங்களைத் திரட்டி, தமது பிள்ளைகளுக்கும், உறவுகளுக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடித்துக் கொடுப்பார்கள் என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை. இது உண்மையிலே நடக்கும் சாத்தியப்பாடு இருந்தால் இதனை விடச் சிறந்த பொறிமுறை இருக்க முடியாது என்பதில் ஐயமில்லை. ஆனால், இன்றிருக்கும் சர்வதேசக் கட்டமைப்புக்குள் மேற்கண்ட முறையில் அமைந்த வலிமையான விசாரணைப் பொறிமுறையொன்றை நிறுவ முடியாது. இலங்கை அனுமதித்தால் மாத்திரமே இது அமுலாக்கப்படலாம். இந்த விளக்கக் குறைவு பாதிக்கப்பட்டவர்களதோ அல்லது பொதுமக்களதோ தவறல்ல, மாறாக குற்றம் இன்றைய சர்வதேசக் கட்டமைப்புக்குள் எதைச் சாதிக்கலாம், எதைச் செய்யமுடியாது என்பவற்றை மக்களுக்கு விளக்கத் தவறிய அரசியல்வாதிகளையும், சட்டத்தரணிகளையும், கல்விமான்களையுமே சாரும்.

எனவே, இன்றிருக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறைகள் வெகு சொற்ப எண்ணிக்கையான வழக்குகளுக்கே இடமளிக்கும். மேலும், இப்பொறிமுறைகளால் தமது உறவுகளைத் தேடுவோருக்கு விடையளிக்கவோ, வேதனைப்படுவோருக்கு நிவாரணம் வழங்கவோ, அல்லது யாவும் இழந்து நிர்க்கதியுற்றவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவோ இயலாதெனில் இவற்றை அடைவதற்கான வழிமுறைதான் என்ன? உண்மைக்கான உரிமை, நீதிக்கான உரிமை, பரிகாரத்திற்கான உரிமை மற்றும் மீள்-நிகழாமைக்கன உறுதி என்ற பாதிக்கப்பட்டவர்களது அனைத்து உரிமைகளும் வென்றெடுக்கப்படுவதை உறுதிசெய்வது சகல தமிழ் அரசியல்வாதிகளுடையதும், சிவில் சமூக அமைப்புக்களினதும் பொறுப்பாகும். இது நடைபெற களநிலையிலே முழுமையான மாற்றம் அவசியம். இதற்கு உறுதியான சர்வதேச அழுத்தம் தேவை. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிட்ட களத்திலே ஒரு நியாயமான நீதிப் பொறிமுறை அவசியம். அத்தகையதொரு பொறிமுறை நம்பத்தகுந்ததாக இருப்பதற்கு, பொறிமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் சர்வதேச வகிபாகம் அவசியம். நீதியை மழுங்கடிக்க முன்னெடுக்கப்படும் காய் நகர்த்தல்களைத் தடுக்கத்தக்க வலிமையான சர்வதேச வகிபாகமாக இருக்க வேண்டும்.

இன்று, இலங்கை அரசு முழுமையான உள்ளக விசாரணையை முன்மொழிகின்றது. அந்தப் பொறிமுறை, ராஜபக்‌ஷ அரசின் பொறிமுறைகளை விட எவ்வளவுதான் மேம்பட்டதாக இருந்தாலும், அது பாதிக்கப்பட்ட மக்களது நம்பிக்கையை பெற்றிராது. இவ்விடத்தில் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச விசாரணையின் அறிக்கை மிக முக்கியமானதொன்று. அந்த அறிக்கையின் சிபாரிசுகள் சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய உள்ளகப் பொறிமுறைகளுக்குச் சார்பானதாக இருந்தால் இலங்கை அரசு அதனை இலகுவில் புறக்கணிக்க முடியாது. மேலும், இந்த அறிக்கை வெளிவரக் காரணமாக விளங்கிய அமெரிக்க அரசும், அதன் சிபாரிசுகளை அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. எது நடப்பினும் பாதிக்கப்பட்டோர் நம்பிக்கையை இழக்கலாகாது. நாம் நெடுதூரம் பயணித்துவிட்டோம். 2009இல் மனித உரிமைகள் பேரவையானது இலங்கை அரசைப் பாராட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் கொடூரமான குற்றச்செயல்கள் இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டு, இலங்கைக்குள் அந்தக் குற்றச்செயல்களை விசாரிக்கவும் இணங்குவார். நீதிக்கான எமது பயணத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு இதுவே சான்று. பாதிக்கப்பட்டோருக்கு இது எவ்வகையிலும் போதுமானதாக இராவிட்டாலும், சரித்திரம் பின்னிட்டுப் பார்க்கும்போது, பாதிக்கப்பட்ட தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் செப்டெம்பர் 2015 ஒரு பிரதான மைல் கல்லாகவே கொள்ளப்படும்.

நிறான் அங்கிற்றல்

Published in Tamil

ஐக்கிய அமெரிக்க அரசின் இரு உயர் அதிகாரிகளான நிஷா பிஷ்வால் மற்றும் டொம் மலினோவ்ஸ்கி ஆகியோரின் அண்மைய இலங்கை விஜயம் அது இடம்பெற்ற காலகட்டத்தை நோக்கினால் முக்கியமானதாகும். மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஜெனீவாவிலே இடம்பெறுவதற்கு ஒருசில வாரங்களே உள்ள நிலைமையிலே அவர் விடுத்துள்ள கருத்துக்கள் இலங்கைக்குள்ளும் வெளியேயும் முக்கியமான கண்டனக் கண்ணோட்டங்களை எழுப்பியுள்ளது. ஐக்கிய அமெரிக்க அரசு செப்டெம்பரிலே இடம்பெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலே ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாயும், அந்தத் தீர்மானமானது இலங்கையிலே உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறையை ஆதரிக்கும் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக்கூற்றைத் தொடர்ந்து திருகோணமலையிலே டொம் மலினோவ்ஸ்கி விடுத்த கூற்றிலே அரசின் பொறிமுறை நம்பகத்தன்மையானதாக இருந்தால் மாத்திரமே அதனை அமெரிக்கா ஆதரிக்கும் என்று கூறியுள்ளார். அத்தகைய பொறிமுறை நம்பகத்தன்மையானதாக இருப்பதற்கு அது அரசியல் தலையீடற்ற சுயாதீனமானதாயும், சிறுபான்மை இனத்தவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களால் நடாத்தப்படுவதாயும், மேலாக அது சர்வதேச ஈடுபாட்டைக் கொண்டதாயும் இருக்கவேண்டும் என்று அவர் விளக்கியுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுக்களைப் பற்றிய ஊடகச் செய்திகள் தமிழ் சமூகத்தினரிடையே அதிர்ச்சி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. சர்வதேச விசாரணையை அமெரிக்கா புறந்தள்ளி, உள்நாட்டு விசாரணைக்கு வக்காலத்து வாங்கி, தமிழர்களைக் கைவிட்டுவிட்டதாக பல ஊடகங்கள் முடிவுகட்டிவிட்டன. தமிழர்கள் தமது அரசியல் போராட்டத்திலே பல பின்னடைவுகளைச் சந்தித்துள்ளனர். தமிழ்த்தலைவர்கள் அவர்களது சிங்களச் சகபாடிகளால் பல சந்தர்ப்பங்களிலே ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே, இந்த சந்தர்ப்பத்திலும் அதே பழைய விளையாட்டுத்தான் இடம்பெறும் என அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய சாத்தியம் உள்ளது. அப்படிச் சிந்திக்கத் தலைப்படுவது இயல்பானதே. இருந்தாலுங்கூட, ஜெனீவாவிலே இடம்பெறக்கூடிய நிகழ்வுகள் மற்றும் பொறுப்புக்கூறுதல் விடயத்திலே அதன்பின்பு இடம்பெறக்கூடியவைகள் போன்றவைகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, நாம் உண்மைகளை நிதானமாகக் கருத்திற்கொள்ளவேண்டும். இதற்கெனப் போர்க்குற்றங்கள் தொடர்பிலே, யுத்தத்துக்குப் பிந்திய காலத்திலே இடம்பெற்ற சர்வதேச நகர்வுகள் பற்றிய அண்மைய சரித்திரத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

போர்க்குற்றச்செயல்கள் மற்றும் பொறுப்புக்கூறுதல் தொடர்பிலே சர்வதேச சமூகத்தின் ஈடுபாடானது மே மாதம் 2009 இலே, யுத்தம் முடிவுக்கு வந்த சொற்ப காலத்திற்குள்ளாகவே, ஐ.நா. செயலாளர் நாயகன் பான் கீ மூனும் மஹிந்த ராஜபக்‌ஷவும் ஒரு கூட்டறிக்கையிலே கைச்சாத்திட்டதுடன் ஆரம்பித்தது. அந்தக் கூட்டறிகையிலே சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் போன்றவற்றின் மீறுதல்களையிட்டுப் பொறுப்புக்கூறவைக்கும் ஒரு செயன்முறையை இலங்கை ஸ்தாபிக்கும் எனும் தனது எதிர்பார்ப்பினை பன் கீ மூன் தெரிவித்தார். அந்த விடயங்களைக் கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக ராஜபக்‌ஷவும் இணங்கினார். அதே மாதத்திலே ஜெர்மனி மனித உரிமைகள் பேரவையிலே இலங்கையைக் கண்டிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சித்தும் வாக்களிப்பிலே தோல்விகண்டது. பேரவையிலே உள்ள தனது பங்காளிகளுடன் இணைந்து இலங்கை தனக்கு விரும்பிய ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டது.

ஆயினும், அர்த்தமுள்ளதும் நம்பகத்தன்மையானதுமான முறையிலே இலங்கை போர்க்குற்றங்களைக் கவனத்திற் கொள்ளத் தவறியதால், இறுதியிலே மார்ச் 2012இலே மனித உரிமைகள் பேரவையிலே இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றக் கூடுமாய் இருந்தது. இந்தத் தீர்மானம் மிகவும் எளியதாகவே இருந்தது. அது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும்படியும், அதற்கும் அப்பாற் சென்று நம்பத்தகுந்த உள்ளூர்ப் பொறிமுறையை நிலைநாட்டும்படிக்கும் இலங்கை அரசைக் கோருவதாக இருந்தது.

மீண்டும் ஒரு தடவை இலங்கை சர்வதேச சமூகத்துக்குச் செவிமடுக்கத் தவறிவிட்டது. எனவே, மார்ச் 2013 பேரவையிலே அதேபோன்ற ஆனாலும், மிகவும் கண்டிப்பான தோரணையிலே அமைந்த ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக, மார்ச் 2014இலே, சர்வதேச விசாரணை கட்டாயமாக இடம்பெறவேண்டும் என்ற தீர்மானம் பேரவையிலே நிறைவேற்றப்பட்டது. ஒரு சில சிறு தமிழ் அரசியற் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அந்தத் தீர்மானத்துக்கு எதிராக விடுத்த கண்டன விமர்சனங்களின் மத்தியிலும் அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது வலிமையானதாயும் வல்லமையான சர்வதேச விசாரணையை உருவாக்குவதாயும் இருந்தது. ஆயினும், அதே தீர்மானத்திலேயே நம்பத்தகுந்த ஒரு உள்ளூர்ப் பொறிமுறையை மேற்கொள்ளும்படி இலங்கை அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் இருந்தது. சிலர் இதனைக் கண்டித்து, ஒரே பிரேரணையே சர்வதேச விசாரணையை நிலைநாட்டும் அதேவேளை, உள்ளூர்ப் பொறிமுறையை எவ்வாறு நிறுவும்படியாக அரசுக்கு அழைப்பு விடுக்கலாம்? எனக் கேள்வி எழுப்பினர். ஆயினும், நம்பத்தகுந்த ஒரு உள்ளூர்ப் பொறிமுறையை மேற்கொள்ளும்படி இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுப்பதே சர்வதேச சமூகத்தின் நாட்டமாக இருந்தது என்பதுதான் நிஜமே ஒழிய மற்றப்படியல்ல. இதனாலேதான் மார்ச் 2014 தீர்மானமானது சர்வதேச விசாரணையை நிலைநாட்டும் அதேவேளை, குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை அதற்காகப் பொறுப்பேற்கச் செய்யும்படிக்கும் இலங்கை அரசுக்கும் அழைப்பு விடுவதாய் இருந்தது. “மீறுதல்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்பேற்கச் செய்வது…” எனும் பதமானது வெறுமனே விசாரணை நடத்தும் கடப்பாட்டுக்கும் அப்பால், அவர்கள் மீது வழக்குத்தொடுத்து குற்றச்செயல்கள் புரிந்தவர்களைத் தண்டிப்பதையும் வேண்டிநின்றது.

இந்த இடத்திலேதான் நாம் ‘விசாரணை’க்கும் ‘பொறிமுறை’க்கும் இடையிலான முக்கிய வேறுபாட்டைக் குறித்துக்கொள்ள வேண்டும். விசாரணை என்பது வெறுமனே சாட்சிகளுடன் பேசி, சான்றுகளைச் சேகரித்து, குறிப்பிட்ட சில கண்டுபிடிப்புகளுக்கு வரும். ஆயினும், பொறிமுறையானது மிகவும் அகன்றுபட்டதான ஒரு கொள்கையாகும். அது யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதிமன்றத்திலே முற்படுத்தி, உண்மையைக் கண்டுபிடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடுகளை வழங்கி, அவர்களை வேதனைக்கு உள்ளாக்கிய கடந்த கால நிகழ்வுகள் மீள இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்துதல் ஆகியவைகளை உள்ளடக்கியது. தெளிவுறத் தெரிவது எதுவென்றால், சர்வதேச விசாரணையானது தற்போது பூர்த்தியானது மட்டுமன்றி, மேலதிக விசாரணைக்குத் தேவை இல்லை என்பதாகும். மேலும் உண்மையைக் கூறவும் நீதியை வழங்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் ஒரு புதிய பொறிமுறையை நிலைநாட்டவேண்டியதாக தேவை தற்போது உள்ளது.

எனவே, சர்வதேச விசாரணையை அமெரிக்காவோ அல்லது வேறு எவருமோ புறந்தள்ளிவிட்டன எனும் வாதமானது சர்வதேசச் சட்டம் அல்லது மனித உரிமைகள் பேரவை ஆகியவை எப்படிச் செயற்படுகிறது என்பதையிட்டதான சரியான விளக்கத்திலே சார்ந்தது அல்ல. மாறாக, மார்ச் 2014 முதல் இடம்பெற்றுவந்த சர்வதேச விசாரணையானது தற்போது செப்டெம்பரிலே அறிக்கையினை வழங்கும். அந்த விசாரணை அறிக்கையானது பின்பு ஒரு புதிய பொறிமுறையை வேண்டி, புதிய பொறிமுறையானது அதன் பரிந்துரைகளுக்கு ஏற்பவே அமுல்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தும்.

இந்தக் கட்டத்திலேதான் இந்தப் புதிய பொறிமுறையானது பரிந்துரைகளை எப்படி அமுல்படுத்தப்போகிறது என்ற கேள்வி எழுகின்றது. நாட்டுக்குள்ளே மேற்கொள்வதா அல்லது நாட்டுக்கு வெளியேயா? நாட்டுக்கு உள்ளேயானால் அந்தப் பொறிமுறை மீதான சர்வதேச பங்களிப்பு எவ்வாறானதாக இருக்க வேண்டும்?

உண்மை அறிதல் மற்றும் நட்ட ஈடுகளை வழங்குதல் போன்றவற்றையிட்டு விவாதிப்பதற்கு இடமில்லை. இந்த நாட்டுக்குள்ளேயே பொறிமுறையானது பூர்த்திசெய்யப்படவேண்டும் என்பது தெளிவு. உண்மை நாடும் முன்னெடுப்புகளுக்கு, குறிப்பாக காணாமற்போனோர்களைப் பொறுத்த விடயங்களுக்கு பாரிய புதைகுழிகள் தோண்டப்படவேண்டும். தடுத்து வைத்திருக்கும் இடங்கள் யாவும் பரிசோதிக்கப்படவேண்டும். அரசக் கோவைகளைப் பார்த்தாகவேண்டும். இவை அனைத்துமே இலங்கைக்குள்ளான ஒரு பொறிமுறையை வேண்டிநிற்கும். பிரான்ஸிலோ அல்லது ஜெனீவாவிலோ உள்ள பொறிமுறைகளால் இவற்றைச் செய்ய இயலாது. நட்ட ஈட்டைப் பொறுத்தவரைக்கும் அரசே பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடுகளை வழங்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கான பணம் நியூயோர்க்கிலோ அல்லது லண்டனிலேயோ விநியோகித்திட முடியாது. அது களத்திலே உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கே வழங்கப்படுதல் வேண்டும்​

நீதியைப் பொறுத்தவரைக்கும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஒரு சர்வதேசப் பொறிமுறையை மாத்திரமே நாம் வலியூட்டவேண்டும் எனச் சிலர் வாதிப்பதுண்டு. ஆயினும், நான் முன்னர் எழுதிவந்ததைப்போலவே, இலங்கையை சர்வதேசக் குற்றவியல் மன்றத்துக்கு அனுப்பிவைப்பது என்பது சாத்தியமற்றதாகும். ஏனெனில், ஐ.நா. பாதுகாப்புப் பேரவையிலே ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை தமது வீட்டோ அதிகாரத்தை அவ்வாறான ஒரு தீர்மானத்துக்கு எதிராக பாவிப்பார்கள் என்பது தெரிந்த விடயம். மேலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை தொடர்பான வழக்குகள் நடைபெற்றாலும் கூட, குற்றவாளி வசிக்கும் நாடானது ஒத்துழைத்தாலே ஒழிய, மற்றப்படி அந்த நபரை (நபர்களை) சிறைவைப்பதற்கான சாத்தியம் சொற்பமானதே. உதாரணமாக, சூடான் நாட்டின் ஜனாதிபதி பஷீர் பலவருட காலமாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் தேவைப்படுபவராக இருந்தார். ஆயினும், சூடான் ஒத்துழைக்காதபடியால், பஷீர் அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தொடர்ந்து நிலைகொண்டுள்ளார். மேலும், சர்வதேசக் குற்றவியல் மன்றமானது அது இடைப்படும் ஒவ்வொரு நாடுகளிலும் இருந்து ஓரிரு நபர்களை மாத்திரமே வழக்குக்கு முற்படுத்துவதுண்டு. எனவேஅ போர்க்குற்றம் செய்த அநேகர்களை குற்றங்கள் இழைக்கப்பட்ட நாட்டினுள்ளேயே வழக்குத்தாக்கல் செய்யவேண்டிய தேவைகள் இன்னமும் உண்டு.

இந்தக் காரணங்களாலேதான் இலங்கைக்குள் ஒரு நீதிப் பொறிமுறை இருக்கவேண்டியது அவசியமானதாகும். டொம் மலினொவ்ஸ்கி எனும் அமெரிக்க அதிகாரி கூறியதைப்போலவே, அந்தப் பொறிமுறைகள் நம்பத்தகுந்ததாயும், சர்வதேசப் பங்கேற்பினைக் கொண்டதாயும், தமிழ் சமூகத்தைத் திருப்திப்படுத்துவதாயும் அமையவேண்டும். ஒரு தனி உள்நாட்டு பொறிமுறை (purely domestic mechanism) தமிழர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இராது என்பது உலகம் அறிந்த உண்மையாகும். ஒரு சர்வதேசமயமாக்கப்பட்ட பொறிமுறை (சர்வதேச பங்கெட்டுப்புடனான இலங்கை பொறிமுறை) தான் காலத்தின் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில தலைவர்களின் கூற்றுகளை இந்த கண்ணோட்டத்தில் தான் பார்வையிட வேண்டும். எனவே, சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பேரம் பேசும் சக்தியைப் பயன்படுத்தி, இலங்கையின் பொறிமுறையிலே சர்வதேசப் பங்களிப்பை உறுதிசெய்து மேம்பட்ட நம்பகத் தன்மையை உறுதிசெய்துகொள்வது அவசியமானதாகும். ஜெனீவா கூட்டத்தொடரின் விளைவீடுகள் எப்படி இருக்கும் என்பது எமக்கு இன்னமும் தெரியாது. நீதியே உருவாக்குவதற்கு இட்டுச்செல்லும் சர்வதேச பங்களிப்புடனான ஒரு சர்வதேசமயமாக்கப்பட்ட இலங்கை பொறிமுறை பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்படுமா? அல்லது அங்கே ஒரு பலவீனமான தீர்மானந்தான் நிறைவேற்றப்படுமா? இதுபற்றிய விபரங்கள் இன்னும் தெரியாது. ஆயினும், பாதிக்கப்பட்டோர் மனந்தளர்ந்திடக்கூடாது. நேரியதான ஒரு விளைவு ஏற்படுவது இன்னமும் சாத்தியமே. நீதியை நோக்கியதான முன்னேற்றம் துரிதமாயும் இலகுவாயும் இருக்கும் என நான் சொல்வதில்லை. ஆயினும், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னைய காலத்திலே என்றும் இருந்திராத விதத்திலே நீதிக்கான சாத்தியங்கள் தற்காலத்திலே மிகவும் அதிகமாக உள்ளது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்க வேண்டும். நீதி இறுதியிலே வந்தாகவே வேண்டும். வரும்.

நிறான் அங்கிற்றல்

Published in Tamil

‘மிருசுவில் படுகொலைகள்’ என அறியப்பட்ட வழக்கில் மேல் நீதிமன்ற ட்ரயல் அற் பாரின் அண்மைய குற்றத் தீர்ப்பும் மற்றும் சார்ஜன்ட் சுனில் ரட்னாயக்கவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும் தீவிரத் தேசியவாத சிங்கள பௌத்த கும்பல்களின் முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட ஆவேசமான சீற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், அரச இயந்திரத்தினுள் இருந்து ஒரு சுவாரசியமான பதிலிறுத்தலே இதற்கு வெளிப்பட்டது. இந்தத் தீர்ப்பு, மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்கு இலங்கை சட்ட முறைமையின் செயற்றிறனை வெளிப்படுத்துவதாக இராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறினார் – இந்தக் கருத்து வழக்கு நடவடிக்கையைக் கையாண்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட வேறு பலரினாலும் கூட பிரதிபலிக்கப்பட்டது.

பதவியிலுள்ள அரசு பொறுப்புக் கூறலுக்கு ஒரு ‘முற்றிலும் உள்ளூர் மாதிரியைக்’ கவனத்தில் கொள்வதாக வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளிப்படும் மிகச் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உண்மையாயின், இது – ஒரு முற்றிலும் உள்ளூர் மாதிரி ஊடாக இடைக்கால நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான சாத்தியங்கள் குறித்து அதிகரித்தளவிவான ஐயங்களை வளர்த்துக் கொண்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையிலுள்ள பாதிக்கப்பட்டவர்களுடன், இலங்கை அரசை ஒரு முரண்பட்ட நிலையிலிடும். செப்டெம்பரில், ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு சில தினங்கள் முன், நாடாளுமன்றம் கூடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டிருக்கின்ற நிலையில், செப்டெம்பரின் சில வாரங்களில் நாடாளுமன்றத்தில் குறைந்தது ஒரு சில சட்டபூர்வமான வரைபுகளையாவது அரசு சமர்ப்பிக்கும் என ஊகிப்பதற்கான ஒரு அரங்கு அங்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையிலான காலப்பகுதியினுள் அரசுடன் ஈடுபடுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட வேளையில், செப்டெம்பரில் அநேகம் அறிவிக்கப்படக்கூடிய பொறிமுறைகளை உருவாக்குவதற்கு ஏதேனும் அர்த்தமுள்ள வகையில் இலங்கை அரசு அதன் சொந்த நிபுணர்கள், சிவில் சமூகம் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை ஈடுபடுத்துவதற்கு நிர்ப்பந்திப்பதில் இதுவரை தவறியுள்ளது. குறிப்பாக, இலங்கைச் சூழ்நிலையில் சர்வதேச நியமங்களைத் திருப்தி செய்யும் ஒரு மாதிரியின் அமைப்பை அல்லது மாதிரிகளை விளக்குவதற்கு அது தவறியுள்ளது. விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறிப் அவர்களின் அவதானித்தல்கள் வரவேற்கப்பட்டு சமனிலைப்படுத்தப்பட்ட வேளையில், அவை மிகவும் ஆரம்ப நிலையிலானவையாக இருந்ததுடன், அதன்பின் அதிகளவு விடயங்கள் நடந்தேறியுள்ளன. மார்ச்சில் ஆணையாளர் செயிட் இலங்கைக்கு ஒரு ஒத்திவைப்பை வழங்கிய பின்னும் கூட ஐ.நாவின் ஒரு பொருத்தமான மூலோபாயமின்மை ஐ.நாவின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் சபிநே நன்டி அவர்களின் அண்மைய கருத்துக்களிலிருந்து வெளிப்பட்டது. உள்நாட்டு – சர்வதேச கலப்பு முறை சார்ந்து ஆணையாளர் செயிட் அவர்களின் அலுவலகத்தால் சாத்தியமான பரிந்துரைத்தலை முன்கூட்டியே தடுத்து, ஒரு திட்டவட்டமான ‘உள்ளூர்’ செயன்முறைக்காக ஐ.நாவின் நிதி உதவியை அவர் வேண்டியதாகத் தெரிகிறது.

இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஏதேனும் செயன்முறைகளில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மனித உரிமை மீறல்களின் வழக்குத் தொடர்தல்கள் தொடர்பாக தீவிரமான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் ஏன் முதலில் தேவைப்படும் என்பதை வெளிக்காட்டுவதற்கு மிருசுவில் வழக்கிலான ஒரு சில அவதானித்தல்களை இந்தக் கட்டுரையில் நான் தருகிறேன்.

முதலாவது, மிருசுவில் படுகொலை தொடர்பான வழக்கு, இலங்கையினுள் அரச செயற்பாட்டாளர்களால் புரியப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான மனிதப் படுகொலைகளுள், குற்றத்துக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் கொண்டுவரப்பட்ட ஒரு சில வழக்குகளுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. மிகப் பெரும்பாலான வழக்குகளில் சந்தேகத்திற்குரியவர்கள் ஒரு நீதிமன்றத்தின் முன் ஒருபோதும் கொண்டு வரப்பட்டதே இல்லை அல்லது வழக்குகள் தொடுக்கப்பட்டவிடத்து அவை நிலுவையில் உள்ளன அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், 2000ஆம் ஆண்டின் முற்பகுதி, அப்போதைய சந்திரிக்கா குமாரதுங்க அரசால் ஒரு தொகையான வழக்கு நடவடிக்கைகள் தொடரப்பட்டன. இவை பிந்துனுவெவ வழக்கு மற்றும் கிருஷாந்தி குமாரசுவாமி வழக்கு என்பவற்றை உள்ளடக்குகிறது. ஆனால், மின்னோஸ்டாப் பல்கலைக் கழகத்தின் மொரியா லின்ச் என்பவரின் படி, இலங்கை தொடர்பான அவரது சம்பவக் கற்கையில், இந்த குமாரதுங்க காலத்திலான அதிகரித்த வழக்குத் தொடர்தல் நடவடிக்கைகள் குறுகிய காலமே நிலைத்தது, இந்தக் காலத்தின் போது முன்னெடுக்கப்பட்ட பல வழக்கு விசாரணைகளில் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் அல்லது வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளது என அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இரண்டாவது, இந்த வழக்கு பற்றி கவனத்தை ஈர்க்கும் விடயம் என்னவென்றால் ட்ரயல் அற் பார் நீதிமன்றம் வழக்கு நடவடிக்கைகளை முடிப்பதற்கு பன்னிரெண்டு வருடங்களை எடுத்தமையாகும். இதனொரு மேன்முறையீடு முன்னெடுக்கப்படின், அச்செயன்முறை எந்தளவு நீண்ட காலம் எடுக்கும் என்பது நிச்சயமற்றதாக உள்ளது. ஒரு குறைந்த காலத்துக்கான ஊகமே மேலும் மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் வரை எடுக்கும் என்பதாக உள்ளது. மிருசுவில் வழக்குத் தொடர்பான குற்றப் பகிர்வுகள் குற்ற விசாரணையைத் தொடர்ந்து இரண்டு வருடங்களிலேயே வந்தது, என்பதுடன் விசாரணை விளக்கம் 2003ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் என்ன நடைபெற்றது என்பது இலங்கையின் ஒரு சீர்திருத்தம் அடையாத சட்ட முறைமையிடம் பொறுப்புக்கூறலை விடுவது, குறிப்பாக ஏன் ஒரு மோசமான யோசனை என்பதைச் சரியாக எடுத்துக் காட்டியது. வழக்கை விசாரிக்கும் அமர்வுக் குழுவின் கட்டமைப்புக்கான பல்வகை மாற்றங்களோடு வழக்கு அலைபட்டது. வழமையானதொரு மேல் நீதிமன்ற விசாரணையை விட துரிதமான ஒரு விசாரணை வடிவம் எனக் கருதப்பட வேண்டிய – ஒரு ட்ரயல் அற் பார் – வழக்கை முடிப்பதற்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்டமை நீதி முறைமையின் முற்றிலுமான அசாதாரண செயற்பாடு என்பதின் ஒரு துரதிர்ஷ்டவசமான சுட்டிக்காட்டுதலாக உள்ளது. இதனாலேயே கொடூரக் குற்றங்களைக் கையாள்வதற்கு ஒரு விசேட நீதிமன்றம் அத்தியாவசியமாகின்றது. அது இன்றி, மனித உரிமைகள் துஷ்பிரயோகங்களைக் கையாளும் விசாரணைகளே, அவற்றின் தரங்கள், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை, வெளிப்படைத் தன்மை மற்றும் செயன்முறையின் தொடர்ச்சி என்பவற்றின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் விளைவுகளுடன் பல தசாப்தங்களை எடுக்கும்.

மூன்றாவது, இந்த வழக்கானது கொடூரக் குற்றங்களுக்கான அரச உத்தியோகத்தர்களின் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான சட்ட நடவடிக்கைகள் பலவற்றுக்குப் பொதுவான ஒரு மாதிரியை தவறாது பின்பற்றியது. அதாவது, புலன்விசாரணைகள் உள்நாட்டு அல்லது சர்வதேச அழுத்தம் அல்லது அவை இரண்டின் காரணமாக முன்னெடுக்கப்பட்டன. சந்தேக நபர்கள் பலர் இனங்காணப்பட்டனர். ஆனால், ஒரு சில கீழ் நிலை படைவீரர்களே குற்றஞ் சாட்டப்பட்ட வேளையில் மற்றையவர்கள் குற்றஞ் சாட்டப்படவில்லை. விசாரணையின் போது விடுவிக்கப்பட்டனர் அல்லது விடுதலை செய்யப்பட்டனர். எம்பிலிப்பிட்டிய, பிந்துனுவௌ, செம்மணி மற்றும் இப்பொழுது மிருசுவில் வழக்குகள் இந்த இடர்ப்பாடான மாதிரியையே எடுத்துக் காட்டின. மிருசுவில் வழக்கில், இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டுப் பொதுமக்கள் கண்கள் கட்டப்பட்டு அவர்களின் தொண்டைகள் கத்தியால் அறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். அவர்களது உடலங்கள் ஒரு கழிவறைக் குழியில் போடப்பட்டன. தனிக் குற்றவாளியாகக் காணப்பட்ட சார்ஜன்ட் ரட்னாயக்க பதினேழு குற்றச்சாட்டுக்களில் குற்றங் காணப்பட்டார். அதிலொன்று, கொலை செய்யும் பொதுவான நோக்கத்தோடு சட்டவிரோதமாகக் கூடியமையாகும். ஒன்று சேர்ந்து பல ஆட்களால் ஒரு தொடரான குற்றங்கள் புரியப்பட்டமைக்கு தெளிவான சாட்சியங்கள் இருந்தபோதிலும், குற்றம் நடைபெற்று பதினைந்து வருடங்களுக்கு மேலாகியும் ஒரேயொரு நபர் மட்டுமே குற்றவாளியாக நிற்கிறார். இந்த வழக்குகள் புலன்விசாரணை மற்றும் மனித உரிமைகள் வழக்கு நடவடிக்கைகள் என்பவற்றிலான கட்டமைப்புக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றதுடன், பொலிஸ் புலன்விசாரணை மற்றும் சட்ட மா அதிபர் முன்னெடுக்கும் வழக்கு நடவடிக்கைகளில் பரவலான அவநம்பிக்கையையே ஏற்படுத்தியுள்ளன. 1994 மற்றும் 1998 காணாமற் போனவர்களின் புலன்விசாரணை ஆணைக்குழு மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு ஒரு சுயாதீனமான வழக்குத் தொடுநரை அரசு அதிகாரமளித்தல் வேண்டுமென ஏற்கனவே பரிந்துரையை மேற்கொண்டுள்ளது. புலன்விசாரணை செய்வதற்கு ஏற்பாடளிக்கப்பட்ட சுயாதீனமான ஒரு வழக்குத் தொடுநரின்றி, கடுமையான மனித உரிமை மீறல்களின் வழக்குகளைத் தயார் செய்து வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளும், ஒரு உள்நாட்டுச் செயன்முறை குற்றவிலக்களிப்பு மற்றும் திரும்பத் திரும்ப நடைபெறும் தவறிய வழக்கு நடவடிக்கைகளின் ஒரு கலாச்சாரத்தை மட்டுமே நிலையானதாக்கும்.

நாலாவதாக, இலங்கையின் குற்றவியல் சட்டங்கள் பெருமளவிலான கொலைகளின் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொள்வதற்கும் மற்றும் குற்றங்களுக்கு கூடுதலாகப் பொறுப்பு வகிப்பவர்களுக்கு கட்டளையிடும் மற்றும் மேற்பார்வை பொறுப்பு மீது கவனம் செலுத்துவதற்கும் வருத்தமளிக்கும் வகையில் போதுமானவையாக இல்லை. யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற சர்வதேசக் குற்றங்களைக் குற்றவியல்படுத்துவதற்கு சட்டங்கள் திருத்தப்பட்டாலன்றியும் – மற்றும் அதனுடன் கட்டளைப் பொறுப்பு மற்றும் கூட்டுக் குற்ற முயற்சி பொறுப்பு மாதிரிகளை அறிமுகம் செய்தாலன்றியும் – குற்றங்களில் யார் கட்டளையிட்டது, அனுசரனையளித்தது அல்லது உடந்தையாயிருந்து தீர்மானம் மேற்கொண்டவர்கள் என்பதை சுயாதீன வழக்குத் தொடுநர்கள் மற்றும் புலன்விசாரணையாளர்கள் கூட கவனிக்காது விட்டுவிடுவது உயர்ந்தளவிலாக இருக்கும்.

இறுதியாக, சுயாதீனத் தன்மை, நடுநிலைத் தன்மை மற்றும் தகுதிவாய்ந்த நிலை என்பவற்றின் ஒரு அளவை உறுதிப்படுத்துவதற்கு வெறுமனே தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் உதவி என்பனவின்றி, சர்வதேசப் பங்குபற்றுதல் அவசியமாகும். சிக்கலான சர்வதேசக் குற்றங்களின் புலன்விசாரணை மற்றும் வழக்கு நடவடிக்கை என்பன நிபுணர்களின் நிபுணத்துவம் மற்றும் முழுமையான பக்கச்சார்பின்மை என்பவற்றைத் தேவைப்படுத்துகிறது. அதன் சொந்த நியாயாதிக்கத்தினுள் இந்தக் குற்றங்களுக்கு வழக்கு நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை உரித்துடையதாக உள்ள வேளையில், தகுதிவாயந்த சர்வதேச நிபுணர்களின் உள்வாங்குதல் ஊடாக அந்த நியாயாதிக்கம் ஏன் அப்பியாசிக்கப்பட முடியாதென்பதற்கு ஒரு காரணம் எதுவுமில்லை.

ஆகையால், இலங்கையின் குற்றவியல் நீதி எந்தளவிற்கு இயலுமாதென்பதற்கு மிருசுவில் வழக்கு சிறந்த முறையில் எடுத்துக் காட்டுகிறது. வழக்கில் சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் சுய பாராட்டு வெளிப்படுத்தல்களிலிருந்து அது தெளிவாகின்றது. சுயாதீனம் மற்றும் சர்வதேச நியமங்களுக்கான கடைப்பிடித்தல் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு முழுமையான சீர்த்திருத்தங்கள் நீதி முறைமைக்குத் தேவைப்படுகின்றது. குற்றவிலக்களிப்பை முடிவுறுத்துவதற்கு ஓர் எதிர்கால அரசின் பற்றுறுதி, சர்வதேச அழுத்தம் காரணமாக பலிபீடத்தில் ஒரு சில கீழ் நிலைப் படைவீரர்கள் மற்றும் அரசியல் எதிரிகளைப் பலியிடுவதற்கு எந்தளவிற்கு அது முனைப்பாக உள்ளது என்பதினால் இல்லாது, இலங்கையின் இருண்ட கடந்த காலத்துடன் கையாள்வதற்கு அவசியமான நிறுவனங்கள் மற்றும் ஏற்பாடுகளை உருவாக்குவதற்கு அவசியமான நிறுவனரீதியான மற்றும் சட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அது எந்தளவிற்கு விருப்பாக உள்ளது என்பதினால் அளவிடப்படும்.

THE MIRUSUVIL CASE: WHY SEARCHING REFORM IS URGENT AND NECESSARY என்ற தலைப்பில் ‘கிரவுண்ட்விவ்ஸ்’ தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.

Published in Tamil

உலகின் பல பாகங்களிலே ஊடக சுதந்திர தினமானது தமது ஊடகப்பணியை ஆற்றும்போது கொலையுண்ட ஊடகவியலாளர்களை நினைவுகூருவதால் கொண்டாடப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அப்படிப் பலியானவர்களின் தொகையானது எனது பேச்சிலோ இப்படியான ஒரு நிகழ்விலோ குறிப்பிட்டுச் சொல்லிமுடியாதபடிக்கு அதிகமானதாகும். இங்கு அமர்ந்திருக்கும் ஊடகவியலாளர்கள் உட்படப் பலர் இன்றும் அதேபோன்ற ஆபத்துக்குத் தொடர்ந்தும் முகங்கொடுத்தும் வருகின்றனர். இருண்ட காலகட்டங்களிலுங்கூட பாதுகாக்கப்பட்டு வந்துள்ள தொழிற்துறையில் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியிலே, பெரும் விலை கொடுத்த இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு எனது ஆழ்ந்த கனத்தை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த சலாக்கியமாகவே இதனை நான் பார்க்கிறேன். அறிந்துகொள்வதற்கான எமது உரிமையைப் பாதுகாப்பதிலே பெரும் கிரயத்தைச் செலுத்திய அவர்களைச் சிரம் தாழ்த்திக் கனம் செய்கிறேன். இந்தக் காலைப்பொழுதிலே பேசும்படியாக எனக்குத் தரப்பட்ட தலைப்பு, “போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறுதலும் ஊடக சுதந்திரமும்” என்பதாகும். மக்களைச் சுண்டியிழுக்கும் ஒரு தலைப்பாக இது தெரிந்தாலுங்கூட, ஊடகவியலாளர்கள் – குறிப்பாக வடக்குக் கிழக்கிலே உள்ளவர்கள் – அனுதினமும் முகங்கொடுக்கும் அம்சங்களையே நான் கவனத்திற்கொள்ள விரும்புகிறேன். இப்படியான தலைப்பைக் கையாள்வதற்கு நான் எனது உரையை இரு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, சர்வதேசக் குற்றச்செயல்களைத் தெரியப்படுத்துவதிலே ஊடகத்தின் (மற்றும் ஊடக சுதந்திரத்தின்) வகிபங்கு. இரண்டாவதாக, நிலைமாற்றுக்காலநீதியின் செயன்முறையிலே கடந்தகாலத்திலே இடம்பெற்ற சர்வதேசக் குற்றச்செயல்களைக் கையாளுவதிலே ஊடகத்தின் (மற்றும் ஊடக சுதந்திரத்தின்) வகிபங்கு. வேறுபல நாடுகளைப்போலவே இலங்கையிலும் போர்க்குற்றங்கள், மனுக்குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் இன அழிப்பு ஆகியவை பற்றி அறிக்கைசெய்வதென்பது ஆபத்தான காரியமாகும். அநேகமாக இந்தக் குற்றச்செயல்கள் தமது குற்றச்செயல்கள் பகிரங்கப்படுத்தப்படுவதை விரும்பாத மிகவும் வல்லாதிக்கமுள்ளவர்களால் இழைக்கப்படுவதுண்டு. போர்க்குற்றங்கள் பற்றி அறிக்கைசெய்வது பெரும் ஆபத்தை விலைக்குவாங்வது போன்றதே. வாளைவிடப் பேனாமுனை பலம் மிக்கது என்பதைப் போரிடும் தரப்பினர் உணர்ந்திருப்பதாலே ஒருவேளை இப்படியாகக்கூடும். ஆயினும், இப்படியான ஆபத்துக்களிலிருந்தும், யுத்த வலயங்களுக்குள் நுழைவது மறுக்கப்பட்டிருந்தும், பல நாடுகளிலே போர்க்குற்றங்களையும் வேறு சர்வதேசக் குற்றச்செயல்களையும் வெளிக்கொணர்வதற்கு ஊடகவியலாளர்கள் உதவியுள்ளனர். சர்வதேசக் குற்றங்கள் இடம்பெறுகையிலே அவற்றைத் தமது ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளிலே பதிவுசெய்து, வலைத்தளங்களுக்கு அந்தச் சான்றுகளைத் தரவேற்றும் ‘குடிமக்கள் ஊடகவியலாளர்கள்’ அதிகரித்து வருகின்றனர். இந்த யுக்தி இலங்கையிலும் கணிசமான அளவுக்குப் பயன்படுத்தப்படுவதை நாம் கண்டுள்ளோம். உதாரணமாக. நுழைவு அனுமதி மறுக்கப்பட்டிருந்த மெனிக்பாம் தடுப்புமுகாமின் ஆரம்பகட்டத்து நிலைமை மற்றும் அங்கு அடைக்கப்பட்ட மக்களின் மோசமான நிலைமை போன்றவற்றையிட்ட படங்கள், அந்த முகாமுக்குள் சென்ற குடிமக்கள் ஊடகவியலாளர்களாலேயே வெளிக்கொணரப்பட்டன. ஆயினும், குற்றங்கள் மத்தியிலே ஊடகவியலாளர்கள் சேதமாக்கும் வகிபங்கை வகிப்பதும் சாத்தியமே. மனுக்குலத்துக்கு இழைக்கப்பட்ட மோசமான இன அழிப்புக்களின்போது எப்படியாக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதையிட்ட உதாரணங்களையும் நாம் கண்டுள்ளோம். பல மில்லியன்கணக்கான மக்கள் கொலையுண்ட ஜேர்மனி மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளிலே, அந்த இன அழிப்பை ஊக்குவித்து அவற்றை ஒழுங்கிணைக்க உதவிய வானொலி நிலையப் பணியாளர்களே அவற்றுக்குப் பொறுப்பைக் கொண்டவர்கள். இலங்கையிலுங்கூட, உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் யுக்தியான ‘நடுகை ஊடகவியலாளர்’ பயன்படுத்தப்பட்டதை நாம் கண்டுள்ளோம். ஒரு தரப்பாரை ஆதரிக்கும் ஊடகவியலாளர்கள் இராணுவ அலகொன்றிலே உள்வாங்கப்பட்டு யுத்த வலயங்களுக்குச் செல்லும் அனுமதி அவர்களுக்கு வழங்கப்படுவதுண்டு. களநிலைச் செய்திகள் பற்றிய உண்மையின் விளக்கத்தை வழங்குகையிலே, இத்தகைய ஊடகவியலாளர்களின் அறிக்கைகள் பக்கச் சார்பானதாக இருப்பது இயல்பானதே. அதேபோலவே, குடிமக்கள் ஊடகவியலாளர்களும் அபத்தமானவர்களாக ஆகிடக்கூடும். ஒன்றில் அவர்கள் ஒரு தரப்பாரின் கொள்கைபரப்பினை ஊக்குவிப்பதாலேயோ அல்லது ஊடக விதிகள் மற்றும் தர்மங்களுக்கு ஒழுகாத பொறுப்பற்ற சமூக ஊடகப்பயன்பாடுகளாலேயோ இப்படியாகலாம். எனவே, மோசமான குற்றச்செயல்களை வெளிக்கொணர்வதற்கு எப்படியாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் செயற்படுமோ, அதேபோலவே அந்தக் குற்றங்களை மூடிமறைக்கவும் மேலும் குற்றங்களைச் செய்யும்படி ஊக்குவிக்கவும் ஊடகம் பயன்படுத்தப்படலாம். இதனாலேதான், சான்று இருந்தாலுங்கூட பெருமளவிலான குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றதையிட்டு உலகுக்கு உறுத்தியுணர்த்துவது கடினமானதாகிறது. தப்பான தகவல்களின் திரட்சியால், தீர்மானம் எடுப்பவர்களுக்கு யாரை நம்புவது என்ற குழப்பம். இலங்கையிலே, பிரதானமாகச் சர்வதேச விசாரணையைத் தவிர்க்கும் பிரகாரமாக, இராணுவமும் முன்னைய அரசும் திட்டமிட்டுப் புனையப்பட்ட தப்பான தகவல்களைச் பரப்பி வந்தது. “குடிமக்களின் இறப்பு பூச்சியம்”, “யுத்த சூனியப் பிரதேசம்”, “சகல கனரக ஆயுதங்களையும் முடிவுக்குக் கொணர்தல்”, மற்றும் “மனிதாபிமான நடவடிக்கை” போன்றவைகளைப் பற்றி அவைகள் பேசிவந்தன. இந்தப் பொய்கள் கூறப்பட்டுக் கொண்டிருக்கும் போதே குண்டுத்தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான அப்பாவிக் குடிமக்கள் கொலை செய்யப்பட்டனர். எனவே, சர்வதேசக் குற்றங்களையிட்டு அறிக்கையிடும் ஸ்தாபனங்களின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி இங்கே எழுகிறது. பாதுகாப்பதற்கான பொறுப்புக் கோட்பாட்டின் (Responsibility to Protect Doctrine) வெளிச்சத்திலே இந்தக் கேள்விகள் பொருத்தமானவை. ஒரு நாட்டிலே சர்வதேசக் குற்றங்கள் பெருமளவிலே இடம்பெறும்போது, அவற்றைத் தவிர்ப்பதற்குக் குறிந்த அந்த நாடு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், சர்வதேசச் சமூகம் குடிமக்களைப் பாதுகாப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் பணிப்புரையின் கீழ் பல படிமுறைகளை எடுத்திடலாம். சர்வதேத் தீர்மானம் எடுப்போருக்கான கேள்வி தொடர்கிறது – என்ன நடக்கிறது என்பதே தெரியாவிட்டால், என்ன செய்வது என்று எமக்கு எப்படித் தெரியும்? லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலே அண்மை காலங்களிலே இடம்பெற்ற பூசல்களின்போது, அவை தொடர்கையிலேயே அவற்றை விசாரிப்பதற்கு ஐ.நா. ஒரு விசாரணை மன்றத்தை அமைத்து, ஐ.நா. இற்கு எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதைப் பரிந்துரைத்திருந்தது. ஆயினும், இந்த விசாரணைகள் நீடிய காலம் எடுக்கும் என்பதுடன், களநிலை அறிக்கையிடுதலுக்கு அவை மாற்றீடாக அமையவே அமையாது. ஆனால், ‘களநிலை அறிக்கையிடுதல்’ வல்லமையுள்ளதாய் இருப்பதை உறுதிசெய்வதற்கு அதன் நம்பகத்தன்மை மிக முக்கியமானதாகும். அதாவது, அது தொழிலாண்மை கொண்டதாயும் நேர்மையானதாயும் நடுநிலையானதாயும் இருக்கவேண்டும். அது ஒரு தரப்புக்குப் பக்கச்சார்பானதாகக் கண்டுகொள்ளப் படக்கூடாது. முன்நகர்ந்து செல்வதற்கு நாம் கற்கவேண்டிய பாடம் இதுவாகும். நாம் நேர்மையானவராயும், நிதர்சனமானவராயும், சகல பாதிப்புற்றோரினதும் மனித உரிமைகளைப் பாதுகாத்து அதனை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தைக் கொண்டவராயும் இருந்தால், சர்வதேச விடங்களிலே மாற்றங்களை விளைவிப்பதற்கு அவசியமான நம்பகத்தன்மையை உலகம் தரக்கூடிய சாத்தியம் உண்டு. நான் ஏற்கெனவே பகிர்ந்துகொண்டதைப்போல, எனது பேச்சின் இரண்டாம் பகுதியிலே நான் நிலைமாற்றுக்கால நீதியும் ஊடக சுதந்திரமும் பற்றிய விடயத்தைக் கவனத்திற் கொள்ள விரும்புகிறேன். அதாவது, குற்றங்கள் இழைக்கப்பட்ட பின்பு சமூகமானது அந்தக் கடந்தகாலக் குற்றங்களைக் கையாள எத்தனிக்கையிலே ஊடகத்தினதும் ஊடக சுதந்திரத்தினதும் வகிபங்கு என்ன என்பதே. பலவிதங்களிலே போர்க்குற்றச்செயல்கள் அம்சங்களிலே அறிக்கையிடும் இந்தப் பகுதி அவ்வளவு கிளர்ச்சியான அனுபவமாய் இராவிட்டாலுங்கூட, இதுவும் அதேபோலவே முக்கியமானதாகும். நிலைமாற்றுக்கால நீதி (Transitional Justice) என்பதால் நாம் கருதுவது என்ன? கடந்த காலங்களிலே பெருமளவிலான குற்றச்செயல்கள் இழைக்கப்பட்டுள்ள இடங்களிலே கடந்த காலத்தை மேற்கொள்வதற்கும் அதைக் கையாள்வதற்கும் சமூகம் மேற்கொள்ளும் படிமுறைகளே இவை. நிலைமாற்றுக்கால நீதிக்கு நான்கு தூண்கள் உண்டு. அதாவது. உண்மை, நீதி, திருத்தியமைப்பு மற்றும் மீள இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதம் ஆகியவைகள். எனவே, குற்றவியல் விசாரணைகள், வழக்குகள், உண்மை அறியும் ஆணைக்குழு, நிவாரண நிகழ்ச்சித்திட்டங்கள், மற்றும் நினைவுகள் ஆகிய அனைத்துமே நிலைமாற்றுக்கால நீதியின் பகுதிகளாகும். நிலைமாற்றுக்கால நீதியின் பிரதான கோரிக்கைளுள் ஒன்றுதான் அதன் பொறிமுறைகளின் வடிவமைப்பு மற்றும் அமுலாக்கம் ஆகியவற்றிலே பாதிக்கப்பட்டோர் ஈடுபடுவது பற்றியதாகும். எனவே, பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாகத் தொடர்பாடுவதிலே பிரதானமான பொறுப்பை அரசாங்கம் கொண்டிருக்கும் அதேவேளை, இலங்கை போன்ற ஆயிரக்கணக்கான பாதிப்புற்றோர் உள்ள நிலையிலே, அவர்கள் அனைவரையும் நேரடியாக ஈடுபடுத்துவது என்பது சாத்தியமற்ற காரியமாகும். எனவே, சகல ஊடகங்களும் பல்வேறான நிலைமாற்றுக்கால நீதியின் பங்காளிகட்கிடையே நிலவும் தொடர்பாடற் பிளவைப் பாலமிடுவதிலே உதவும்பிரதான வகிபங்கை வகிக்கலாம். அது பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசுக்கும் இடைப்பட்ட அல்லது பாதிகப்பட்டவர்களுக்கும் வேறு பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடைப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடைப்பட்ட பிளவுகளையிட்டதாக இருக்கலாம். இந்த வகிபங்கினை வகிப்பதற்கு ஊடகம் சுயாதீனமானதாய் இருக்கவேண்டும். தொடரும் செயன்முறையினைக் கண்டித்து விமர்சிக்க இயலாத ஒரு சூழ்நிலையிலே அவர்கள் அமர்த்தப்படக்கூடாது. இரண்டாவதாக, அவர்கள் நிலைமாற்றுக்கால நீதியிலே பயிற்றப்பட்டு, அதிலே மேற்கொள்ளப்படும் செயன்முறைகளைப்பற்றிப் புரிந்துகொள்ளவேண்டும். இது மிக முக்கியம். இடம்பெறும் செயன்முறைகளின் வகைகள், அவற்றில் உள்ள குறைபாடுகள், அந்த செயன்முறைகளை மேம்படுத்துவதற்கு பரிந்துரைக்கும் வழிமுறைகள், அந்த செயன்முறைகளால் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் போன்றவற்றையிட்டு ஊடகவியலாளர்கள் புரிந்து கொண்டாலேயன்றி பாதிகப்பட்டவர்களும் பொதுமக்களும் அந்தச் செயன்முறைகளைப் பற்றிப்புரிந்துகொள்ள மாட்டார்கள். மிகவும் நேர்த்தியான செயன்முறைகளை நீங்கள் கொண்டிருந்தாலுங்கூட, பாதிக்கப்பட்டோர் அவற்றைப் புரிந்துகொண்டு அவற்றிலே பங்கெடுக்க இயலாதிருக்குமாயின், அதனால் பயனேதுமில்லை. எனவே, அச்சு மற்றும் ஊடகத் தொழிற்துறைத் தலைவர்கள் – குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் – அவர்களின் ஊடகவியலாளர்கள் இந்த செயன்முறைகளிலே நன்கு பயிற்றப்பட்டு பாதிக்கப்பட்டோரின் நலன்களைச் சேவிப்பதை உறுதிசெய்யும் கடப்பாட்டைக் கொண்டவர்களாவார்கள். கடந்த வருடம் மார்ச் மாதத்திலே ஜெனீவாவில் இருந்து சில தமிழ்த்தரப்பினர்கள் ஜெனீவா முறைகள் பற்றியும் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் பற்றியும் பல தப்பான தகவல்களைப் பரப்பியதை நாம் கண்டோம். தமிழர்களுக்கு அந்தத் தீர்மானத்தால் எவ்வித நன்மையும் கிட்டாது, அந்தத் தீர்மானத்திலே சர்வதேச விசாரணை எதுவுமே இல்லை, அது ஒரு பலவீனமான தீர்மானம் என்றும் கூறினார்கள். இந்தக் கூற்றுக்கள் பொய்யானவைகள் என்பது ஒருபுறமிருக்க, அவை எந்த மக்களின் நலனுக்காக நகர்த்தப்பட்டதோ அந்தக் மக்களைக் குழப்பிப்போட்டது. இதிலே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் உள்ளது. நிஜங்களையிட்ட எமது பதிலீடுகள் அவற்றையிட்ட சீரியஸான பகுப்பாய்விலும் தொழிற்தன்மையான அறிவிலும் தங்கியிருக்க வேண்டும்; அரசியல் விளையாட்டுக்களிலும் உணர்ச்சிப் பிரவா புக்களிலுமல்ல. தொடரும் செயன்முறைகள் பற்றிய நேர்மையான விபரிப்புகளுக்கும் நேர்மையற்ற விபரிப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இனங்கண்டுகொள்ளக்கூடிய விதத்திலே எமது ஊடவியலாளர்கள் பயிற்றுவிக்கப்படல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் உண்மை அறிவதற்கும் நீதிக்குமான உரிமை முழுமையாக உணரப்படும் என்பதே எமது பொதுவான நம்பிக்கையாகும். அந்தச் சேவைக்காக எமது பணி அர்ப்பணிக்கப்படட்டும். ஊடக சுதந்திர தினத்தன்று யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நிறான் அங்கிற்றனால் நடத்தப்பட்ட பேச்சு இங்கு தரப்பட்டுள்ளது.

Published in Tamil

மனித உரிமை குற்றங்களையிட்ட உண்மை, நீதி ஆகிய விடயங்களிலே ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் பப்லோ டீ கிறீப் என்பவர் ஏப்ரல் முதல் வாரத்திலே இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அண்மையிலே அந்த விஜயம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளியிட்டிருந்தார். இலங்கையிலே இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களையிட்ட நீதி மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் அந்த அவதானிப்புக்களை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். பப்லோ டீ கிறீப் என்பவர் நிலைமாற்றுக்காலநீதியிலே பிரசித்திபெற்ற நிபுணர் என்பதால் மாத்திரமன்றி இலங்கையின் பொறுப்புக்கூறலைக் கண்காணிக்கவும், வேண்டப்படும்போது அரசுக்கும் சிவில் சமூகத்துக்கும் உதவுவதற்கும் பொறுப்பானவர் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தினால் இனங்காணப்பட்ட ஒருவராய் இருப்பதாலும் அவற்றை நாம் உன்னிப்பாக அவதானிக்கவேண்டும். அவ்வகையிலே அவரது கண்ணோட்டங்கள் உள்ளக ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முக்கியத்துவம் பெறுபவை. குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செப்டம்பர் 2015இலே இலங்கையைப் பற்றிக் கலந்துரையாடும்போது அதன் அங்கத்துவ நாடுகளின் எண்ணங்கள் மீது அவரது கணிப்பீடுகள் பெரும் செல்வாக்கைச் செலுத்தக்கூடியவை. அங்கு பாதிக்கப்பட்டோரைப் பற்றிப் பேசும் பிரதிநிதிகள் வினைத்திறனுடன் செயற்படுவதற்கு, ஐ.நாவின் விசேட நிபுணர் தெரிவிக்கும் செய்திகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அவர்களது அடுத்த கட்ட நகர்வை அதற்கேற்பத் திட்டமிடவேண்டும்.

விசேட நிபுணரின் கருந்துக்களிலே உள்ள திடமான அம்சம் எதுவெனில் அவரது அவதானிப்புக்களிலே பாதிக்கப்பட்டோரின் உரிமைகள் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளமையேயாகும். மேலும், நீதியையும், உண்மையையும் மேற்கொள்வதற்கு இலங்கை அரசே தொடர்ந்தும் பொறுப்பாயுள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது, ஆட்சி மாறியுள்ளதால் பொறுப்புக்கூறவேண்டிய அவசியம் இல்லை எனும் எண்ணப்போக்குக்கு எதிராகப் போரிட அந்த விசேட நிபுணர் உதவியுள்ளார். மாறாக, பொறுப்புக்கூறுதலையும் உண்மையையும் உருவாக்கிடச் சரியான படிமுறைகளைப் புதிய அரசு எடுக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

விசேட நிபுணரின் அவதானிப்புக்கள் இலங்கையின் விசாரணை ஆணைக்குழுக்களைக் காரசாரமாகக் கண்டிப்பதுடன் ஆரம்பிக்கிறது. ஒரு சில ஆணைக்குழுக்கள் பயனுள்ள சிபார்சுகளைச் செய்துங்கூட அவைகள் அமுல்படுத்தப்படாதிருக்கும் அதேவேளை, வேறு சில ஆணைக்குழு அறிக்கைகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவே இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த ஆணைக்குழுக்கள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து வருவதையும், இலங்கை கடந்த காலத்தை வினைத்திறனுடன் கையாளவேண்டுமாயின் விசாரணை ஆணைக்குழுக்களை அது தொடர்ந்தும் தொடரமுடியாது என்பதையும் அவர் குறிப்பிட்டுக்கூறியுள்ளார். விசேட நிபுணர் விடுத்த இந்தக் கருத்துக்கள் வரவேற்கத்தக்கனவாகும். காணாமற் போனோரையிட்டதான தற்போதைய விசாரணை ஆணைக்குழுவை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பில்லை என்பதையும் அவை காண்பிக்கின்றன. வேறொரு அறிக்கையை விடுப்பதால் சர்வதேச அழுத்தத்தில் இருந்து அரசு தப்பித்துக்கொள்ள எதிர்பார்க்கமுடியாது என்பதை பப்லோ டீ கிறீப் தெளிவுபடுத்தியுள்ளார்.

அடுத்ததாக, விசேட நிபுணர் நல்லிணக்கம் பற்றிய விடயத்தையும் கலந்துரையாடுகிறார். நல்லிணக்கம் இடம்பெறுவதற்கு அரசியற்தீர்வு தேவைப்படுவதுடன் உண்மை, நீதி, திருத்தியமைப்புக்கள் ஆகியவையும் அத்துடன், கடந்தகால குற்றச்செயல்கள் மீளவும் இடம்பெறாது எனும் உறுதிப்படுத்தலும் அவசியம் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். பாதிக்கப் பட்டவர்கள் ஒரு அம்சத்தை அடைந்தெய்துவதற்கு வேறொரு அம்சத்தைக் கைவிடும்படியாக எதிர்பார்க்கமுடியாது என்றும் கூறுகிறார். அதாவது, அந்த விசே, நிபுணர் நீதியும் சத்தியமும் அரசியற்தீர்வுக்காக விலைபோகாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். மாறாக, மெய்யான நல்லிணக்கத்துக்கு பாதிக்கப்பட்டோர் சகலரினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். நல்லிணக்கம் கடந்த காலத்தை மறந்துவிடுவதால் அல்ல அதனை நேர்மையுடன் கையாள்வதாலேயே எய்தப்பெறும்.

அடுத்தடுத்துவந்த அரசாங்களிலே ஆதிக்கம் செலுத்திவந்த எண்ணப்போக்குகளான விசாரணை ஆணைக்குழுக்களை அமைப்பது, அரசியற்தீர்வோ, நீதியோ, உண்மையோ இல்லாமல் நல்லிணக்கம் எய்தப்பெறலாம் எனும் எண்ணம் ஆகியவற்றை மேற்படியான அவதானிப்புக்கள் தெளிவாகக் கண்டிப்பதாய் உள்ளது. ஆனாலும், அந்த விசேட நிபுணர் தமிழ் தரப்பினர், சிவில் சமூகம் உட்பட அனைத்துத்தரப்பினர்களுக்கும் பொதுவாகத் தொடர்புபட்ட சில அவதானிப்புகளையும் வெளியிட்டுள்ளார். முதலாவதாக, அவர் குறிப்பிடுவதாவது, நிலைமாற்றுக்கால நீதி மற்றும் பொறுப்புக்கூறுதல் ஆகியவைகள் ஒரு பகுதியினருக்கு நன்மைபயக்கும் சாதனங்கள் என்ற கோணத்திலல்ல, மாறாக மனித உரிமைகள் எனும் கோணத்திலேயே நோக்கப்படவேண்டும். குறிப்பாக அவர் இந்தக் கருத்துக்களை அரசு மற்றும் சிவில் சமூகம் ஆகிய இரு தரப்பாரையும் பொறிவைத்தே கூறியுள்ளார். நிலைமாற்றுக்கால நீதியை மனித உரிமைகள் கோணத்திலே அணுகுவது என்றால் என்ன என்பதை விளக்கி, தீர்வுகள் தேவைப்படும் பாதிப்புக்குள்ளானோரைத் தீர்மானிப்பதற்கான ஒரேயொரு நிர்ணயம் அவர்களது உரிமைகள் மீறப்பட்டனவா என்பதே என்கிறார். இன மற்றும் சமயக் காரணிகள் இங்கு பொருத்தமற்றது. அவர் கூறவிளைவது என்னவென்றால், பொறுப்புக்கூறுதலை சில அரசியற் கட்சிகள் தமது அரசியல் நலன்களை மேம்படுத்தும் அரசியற் கருவியாகப் பயன்படுத்த இயலாது என்பதையே. கிறீப் உடைய கருந்துக்களை வாசித்தால், நீதியைத் தேவையற்றவிதத்திலே அரசியல்மயப்படுத்த நாடும் தமிழ் அரசியற் கட்சிகளையும், சிவில் அமைப்புக்களையும் பொறிவைத்தே அவை கூறப்பட்டுள்ளது தெளிவு. நீதிக்கான எமது கோரிக்கைகள் பல, தமிழர்களின் உரிமைகள் மீறப்பட்டன எனும் அடிப்படையிலேயே முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதைத் தமிழ்ச்சமூகத்துக்கு ஞாபகமூட்டுவதாய் இது உள்ளது. அதன்படி, உரிமைகள் மீறப்பட்ட வேறு சமூகத்தவர்களுக்கும் நீதி கிட்டவேண்டும். எனவே, உரிமைகள் மீறப்பட்டிருந்தால், அது தமிழர்களால் மீறப்பட்டிருந்தாலுங்கூட, முஸ்லிம் மற்றும் சிங்களப் பாதிப்புற்றோருக்கும் நாம் நீதிவேண்டிப்போராடவேண்டும். இரண்டாவதாக, முதலாவதற்குத் தொடர்பானதாக அந்த விசேட நிபுணர் குறிப்பிடுவது என்னவென்றால், மோசமான மீறுதல் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டம் விசேட கவனிப்பைப் பெறவேண்டியதேயாயினும், நிலைமாற்றுக்கால நீதியானது அகன்றுபட்டதான காலவரையறையைக் கருத்திற் கொள்ளவேண்டும் என்பதாகும். அதன்படி, சசல சமூகங்களையும் சேர்ந்த பாதிப்புற்றவர்களை அது கருத்திற் கொள்ளவேண்டும். இந்தக் கருந்திற் தொனிக்கும் தாற்பரியம் என்னவெனில், அனைத்துத் தரப்பாராலும் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களும் ஆராயப்படவேண்டும் என்பதாகும்.

அடுத்ததாக, மனித உரிமைகள் மீறுதலால் பாதிக்கப்பட்டோருக்கும் சிவில் சமூகத்தினருக்கும் இடையே இடம்பெறவேண்டிய கலந்துரையாடல்களின் முக்கியத்துவத்தை விசேட நிபுணர் சுட்டிக்காட்டுகிறார். இவ்வகையிலே மூன்று குறிப்புக்களை அவர் முன்வைத்துள்ளார். முதலாவதாக, பொறுப்புக்கூறும் பொறிமுறையை வடிவமைப்பதிலே பாதிக்கப்பட்டோருக்கும் பங்கேற்கும் உரிமை உண்டு; இரண்டாவதாக, பொறுப்புக்கூறும் அமைப்புக்களின் வடிவமைப்பிலே பங்கேற்கப் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டால் மாத்திரந்தான் அவர்கள் அந்த அமைப்புக்களை நம்பி, அதனுடன் இணைந்து வேலையாற்றுவார்கள்; மூன்றாவதாக, பொறுப்புக்கூறும் பொறிமுறைகளை அகன்றுபட்ட தரப்பார்கள் சொந்தமேற்பது அதன் நீடியகால நம்பகத்தன்மைக்கு அவசியமானதாகும். இந்தக் கருத்துக்கள் ஜனாதிபதி சிறிசேனவும் அவரது அரசும் அறிவித்த அணுகுமுறை மீதான விமர்சனமாகவே நோக்கப்படவேண்டும். அண்மையிலே ‘டைம்’ சர்வதேச சஞ்சிகைக்கு ஜனாதிபதி சிறிசேன வழங்கியுள்ள பேட்டியொன்றிலே, அரசு ஜூன் மாதத்திலே ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையை அறிவிக்கும் என்று கூறியுள்ளார். இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்பதை பப்லோ டீ கிறீப் சுட்டிக்காட்டுகிறார். அரசு தமது தீர்மானத்தை வெறுமனே அறிவித்து பாதிக்கப்பட்டோர் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கமுடியாது. மாறாக, எடுக்கப்படவேண்டிய படிமுறைகளைப்பற்றி அவர்கள் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகளுடனும் சிவில் சமூகத்தினருடனும் பேசி, விளக்கி, பேச்சுவார்த்தைகளிலே ஈடுபடுவதற்கு நேரம் எடுத்தாகவேண்டும். இப்படியான கலந்துரையாடல்கள் நீடிய செயன்முறைகளாக இருக்கும் என்பதை அந்த விசேட நிபுணர் ஒத்துக்கொள்கிறார். அவரது கருத்துக்களிலேட அது நீடிய செயன்முறையாக இருக்கும் என்பதையும் அதற்கு நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் கருத்து என்னவெனில், வரும் மாதங்களிலே பாதிப்புற்ற அனைத்துக் குழுக்களுடனும் அரசு பேச்சுவார்த்தை செயன்முறையை ஆரம்பிக்கவேண்டும் என்பதாகும். ஆனால் தமிழர்களுக்கும் அதிலே ஒரு செய்தி உள்ளது. சில தமிழ் அரசியற் கட்சிகளும் சிவில் சமூகக் குழுக்களும் கூறிவருவதைப்போல, உள்ளூர் பொறிமுறைகளை நாம் முற்றாகப் புறக்கணிக்கிறோம் என்று தொடர்ந்தும் கூறத்தலைப்பட்டால், நாம் ஒத்துழைக்கவில்லை என எம் மீது குற்றஞ்சுமத்திச் சாக்குப்போக்குச் சொல்வதற்கு அரசுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்களாக ஆகிவிடுவோம். சர்வதேச சமூகத்திடம் அரசு சென்று, “நாம் அவர்களுடன் பேச முனைந்தோம், அவர்களோ அதை விரும்பவில்லை” என்று கூறக்கூடும். தமிழரைப் பல தசாப்தகாலங்களாத் தொடர்ந்தும் ரணகளப்படுத்திவரும் அப்படியான மதியற்ற தீவிரச் சிந்தனைப் பொறிக்குள் நாம் சிக்கிவிடக்கூடாது.

அரசுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் சிவில் சமூகக் குழுக்களுக்கும் காலக்கிரமம் பற்றி விடுக்கப்படும் கருத்துக்கள் மனதிற் கொள்ளவேண்டியது முக்கியமாகும். அவை சுட்டிக்காட்டுவது என்னவென்றால், சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாகத் துரிதப்படுத்தப்பெற்ற பொறுப்புக்கூறும் செயன்முறையைக் காணத் துடிக்கவில்லை. மாறாக, பாதிக்கப்பட்டோர் மற்றும் சிவில் சமூகத்தினருடன் இணைந்து நிலைமாற்றுக்கால நீதிக்கான பொறிமுறை பற்றிய தனது பாரத்தைப் பகிரவே அவர்கள் வாஞ்சிக்கின்றனர். இந்தக் கடமையைச் செய்வதற்குத் தவறும்பட்சத்திலேயே செப்டெம்பர் மாதத்திலே அரசு கண்டனத்துக்கு உள்ளாக்கப்போகிறது. அதேபோலத் தமிழ்ச் சமூகத்துக்கும், நீடியகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைச் சர்வதேசச் சமூகத்திடம் கோரி நிற்பதைவிட, நம்பத்தகுந்த பொறிமுறையொன்றைப் பொறுமையாகக் கட்டியெழுப்பும்படி ஞாபகமூட்டப்படுகிறது. ஆனாலும், தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ள பலர் தாம் ஏற்கெனவே நீண்டகாலம் காத்திருந்ததாயும், இனிமேலும் அவர்களைக் காத்திருக்கச் செய்யக்கூடாதெனவும் சுட்டிக்காட்டக்கூடும், அது சரியானதுந்தான். அந்தத் தேவையையும் விசேட நிபுணரின் கருந்துக்களுள் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. பொறுமையான பேச்சுவார்த்தைக்குரிய விடயங்களையும், உடனடியான முன்னேற்றம் காணப்படவேண்டிய விடயங்களையும் வேறுபடுத்துவதன்மூலம் இதனை அவர் செய்துள்ளார். குறிப்பாக, காணாமற்போனோர் விடயத்திலே அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கான விசாரணையிலும், இராணுவத்தால் சுவீகரிக்கபட்டுள்ள காணிகள் விடுக்கப்படுதலிலும், நியாயப்படுத்தமுடியாத கைதுகளை முடிவுக்குக் கொண்டுவருதலிலும், மக்களை தொந்தரவு செய்தலைக் குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கின் பெண்களைத் தொந்தரவு செய்தலை நிறுத்துதலிலும் உடனடியான முன்னேற்றம் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இலங்கை அரசுக்கு பாதிப்புற்றோருடன் கலந்துரையாடி உண்மை அறிதல் மற்றும் பொறுப்புக்கூறுதல் ஆகியவற்றுக்கான கொள்கைத் திட்டங்களை வகுப்பதற்கு நேரம் வழங்கப்படலாம் என்பதை விசேட நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயினும், நிலங்களை விடுவித்தல், காணாமற்போனோர் பற்றிய விசாரணை, இரகசிய தடுப்புக் காவலிலே வைக்கப்பட்டுள்ளோரை விடுவித்தல், மற்றும் வடக்குக் கிழக்கிலே இராணுவத்தினரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிலே அரசு தாமதிக்கலாகாது.

எனவே, விசேட நிபுணரின் அவதானிப்புக்கள் சமநிலையானதும், நேர்மையானதுமாகும். பாதிக்கப்பட்டோருக்கு – குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கிலே உள்ளவர்களுக்கு – அவர் தனது ஆழ்ந்த கரிசனையைக் காண்பிக்கும் அதேவேளை, ஒரு சமூகத்துக்குப் பட்சபாதம் காண்பிப்பதற்கு எதிராக அவர் எச்சரிக்கிறார். மேலும், அவரது சிபார்சுகளுள் அநேகமானவை அரசுக்கே விடுக்கப்பட்டாலுங்கூட, தமிழ் சமூகத்துக்கும் சிவில் சமூகத்துக்கும் தமிழரோ, சிஙகளவரோ, முஸ்லீமோ பாதிப்புற்ற அவர்கள் அனைவரையும் அரவணைக்கும்படியாக ஞாபகப்படுத்துகிறார். இறுதியாக, துரித செயலாற்றத்துக்கு எதிராக அவர் எச்சரித்து, குற்றவியல் வழக்குத்தாக்கல்கள், திருத்தியமைப்புக்கள் மற்றும் உண்மை அறியும் ஆணைக்குழு போன்ற விடயங்களிலே பொறுமையான கலந்துரையாடலை அவர் சிபார்சு செய்து, அதேவேளை இனியும் தாமதிக்க முடியாத உடனடியான சில விடயங்கள் உள்ளதையும் தெழிவுபடுத்தியுள்ளார்.

செப்டெம்பர் 2015 அண்டிவருகையிலே ஐ.நாவின் இலங்கைபற்றி மேற்கொண்ட சர்வதேச விசாரணை அறிக்கையை வெளியிடும்போது, பொறுப்புக்கூறுதல் மற்றும் நிலைமாற்றுக்கால நீதி ஆகியவற்றிலே அறிவுள்ளவராகவும் மதிக்கப்பெறுபவருமான இவருடையை பரிந்துரைகள் எமது உபாயத்திட்டங்களுள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். அப்படிச் செய்வதாற்தான் எமது சாணக்கிய நகர்வுகள் வெற்றியை உறுதிப்படுத்தும். மூன்று காரியங்களையிட்டதான எமது கவனத்தை அவை வேண்டிநிற்கும். முதலாவதாக, பொறுமை வேண்டப்பட்ட இடத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கும் அதேவேளை, அவரசமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயங்களிலே அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தளராமல் அரசுக்கு நெருக்குதல் கொடுக்கவேண்டும். இரண்டாவதாக, எமது அரசியல் மற்றும் சிவில் சமூக நடவடிக்கைகளுக்கு எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களை மாத்திரமல்லாது சகல பாதிக்கப்பட்டோரையும் ஆதரிப்பதன் மூலம் மனித உரிமைகள் அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும். முன்றாவதாக, நிலைமாற்றுக்கால நீதி மற்றும் பொறுப்புக்கூறுதல் ஆகியவற்றுடன் இடைப்படும் எந்தப் பொறிமுறையும் எமது பங்களிப்புடனும் ஒப்புதலுடனுமே இடம்பெறவேண்டும் என்பதை நிர்ப்பந்திக்க வேண்டும். எங்களுடைய கடமைகளை முற்றாக செயற்படுத்துவதால் மற்றுமே அரசுக்கெதிரான அழுத்தத்தை நீடிக்க வைக்க முடியும் என்பதை தமிழ் தரப்பினர் இப்போதாவது உணரவேண்டும்.

நிறான் அங்கிற்றல்

Published in Tamil

கடந்த வாரத்தின்போது ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஸெய்ட் என்பவர், மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச குற்றங்கள் பற்றிய அறிக்கையை ஏற்கனவே வகுத்தபடி மார்ச் 2015 இலே வெளியிடாமல் அதைத் தாமதித்து செப்டெம்பரில் வெளியிடும்படியாகப் பரிந்துரைத்துள்ளார். இந்தத் தீர்மானமானது இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியே கடும் திருப்தியின்மையைத் தோற்றுவித்துள்ளது. ஒரு சிலர் இந்தத் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிக்கும் அளவுக்கும் சென்றுள்ளனர். இலங்கையில் உள்ள மனித உரிமைகள் அமைப்புக்களுள் பெரும்பாலானவை – அவை வடக்கிலும் கிழக்கிலுமோ அல்லது தெற்கிலுமோ இருந்தாலுங்கூட – அறிக்கை திட்டமிட்டபடி மார்ச் மாதத்திலே வெளியிடப்படவேண்டும் என்று உயர் ஸ்தானிகரிடம் கோரியுள்ளன. பல அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்டோர் மற்றும் வடக்கு மாகாண சபை ஆகிய பலரும் கோரியிருந்துங்கூட, பெப்ரவரி 16 அன்று உயர் ஸ்தானிகர் அறிக்கை தாமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகத் தீர்மானித்துள்ளார். முன்னதாக ஐக்கிய அமெரிக்காவும் இலங்கை அரசும் வேண்டுகோள் விடுத்துங்கூட தாமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உயர் ஸ்தானிகரின் தெளிவான நிலைப்பாடானது அவர் மேற்கொண்ட மேற்படியான தீர்மானத்துடன் முரண்படுவதாகவே தென்படுகிறது. இந்தத் தீர்மானத்தினால் நாம் ஆச்சரியப்பட்டு மனமுடைந்தாலுங்கூட, யுத்தத்தின்போதும் அதற்குப்பின்பும் இழைக்கப்பட்ட சர்வதேசக் குற்றங்களையிட்ட நீதியை முனைப்புடன் நாடுபவர்கள் உயர் ஸ்தானிகர் தனது தீர்மானத்தையிட்டுத் தெரிவித்த கூற்றையும் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர உயர் ஸ்தானிகருக்கு எழுதிய கடிதத்தையும் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். இந்த இரு ஆவணங்களையும் ஒன்றாக வாசித்தால், எமக்கு முன்பாக உள்ள சவால்களையும் வாய்ப்புக்களையும் பற்றிய விசாலமான கண்ணோட்டத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

மனித உரிமைகள் பேரவைக்கான உயர் ஸ்தானிகரின் கடிதமும் அவரது ஊடக அறிவிப்பும் பல முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. முதலாவதாக – குறித்த அறிக்கை தாமதிக்க வேண்டியதான காரணங்களை அவர் குறிப்பிடுகிறார். அதிலே முதலாவது, இலங்கையிலே தற்போது மாறியுள்ள சூழ்நிலை, இரண்டாவதாக, குறித்த அறிக்கைக்குப் பல புதிய தகவல்கள் கிடைக்கக்கூடிய சாத்தியம். இதிலே முதற் காரணத்தைப் பொறுத்தவரைக்கும் ஐக்கிய அமெரிக்கா மட்டுமன்றிய புதிய மைத்திரி – ரணில் அரசும்கூட, குறித்த அறிக்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக வெளியிடப்படுமேயாயின் அது சிங்கள பௌத்த கடும்போக்காளர்களிடையே எதிர்மறையான பிரதிபலிப்பை ஏற்படுத்தி, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நெருக்கமான சக்திகளை வலுப்படுத்தி, சிங்களக் கடும்போக்காளர்களால் தேசப்பற்று அற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலவீனப்படுத்திட வாய்ப்புள்ளதாகக் கருதுவது இரகசியமான ஒன்றல்ல. விசாரணைக் குழுவுக்கு அறிக்கையைப் பூர்த்திசெய்வதற்கு இருந்த காலம் அக்டோபர் 2014 முதல் ஜனவரி 2015 வரைக்குமான நான்கு மாதங்களே என்பதால் விசாரணையிலே வழங்கப்பட்ட தகவல்களிலே சில இடைவெளிகள் காணப்படக்கூடும் என்பது இரண்டாவதான காரணத்தைத் தூண்டியிருக்க வாய்ப்புள்ளது. விசாரணைக்கு சான்றுகள் மேலும் கிடைக்கும் என்பதை இது சுட்டிக் காட்டுவதுடன், விசாரணையாளர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களால் இந்த உண்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயர் ஸ்தானிகர் விடுத்த ஊடக அறிக்கையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. அறிக்கையைத் தாமதிப்பதற்கு அவர் தீர்மானம் எடுப்பதென்பது சிரமமானதாயிருந்ததாக அவர் ஏற்றுக்கொண்டு இலங்கையிலே பாதிக்கப்பட்டவர்கள் அந்தத் தீர்மானத்தால் மனமுடைவார்கள் என்பதை அங்கீகரித்துமிருக்கிறார். இந்தத் தாமதாமானது “ஒரு தரம் மட்டுந்தான்” என அவர் குறிப்பிடுவதானது செப்டம்பரிலே அறிக்கை வெளியிடப்படும் எனும் திடப்பாட்டினைச் சுட்டுவதாய் உள்ளது. இவ்வகையிலே அவர் அறிக்கை புதைக்கப்படாமல் வெளியிடப்படும் எனும் “அசைக்கமுடியாத தனிப்பட்ட உத்தரவாதத்தை” வழங்கியுமுள்ளார். அறிக்கையின் தாமதமானது அந்த அறிக்கையைப் புதைப்பதற்கு இட்டுச்செல்லும் எனப் பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் நான் உட்படப் பல சட்டத்தரணிகளும் கொண்டிருந்த கரிசினைகளுக்கு மேற்படியான கூற்றுக்கள் திருப்தியளிப்பதிலே நெடும்பயணம் செய்கிறதாய் உள்ளது. உயர் ஸ்தானிகரிடம் அவரது தீர்மானத்தை வெளியிட முன்பதாக அனுப்பப்பட்ட கடிதங்களில், அறிக்கை மார்ச் மாதம் வெளியிட நிர்ப்பந்திப்பதற்கன அடிப்படைக் காரணம் அந்த அறிக்கை வெளியிடப்படாமலே போகக்கூடும் எனும் அச்சமே காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையைக் கூறுவதாயின், நீதிக்கான எதிர்பார்ப்புக்களைப் பொறுத்தவரைக்கும் அறிக்கையை ஆறுமாதம் தாமதித்து வெளியிடுவது எவ்விதத்திலும் தீங்கானதல்ல. உண்மையிலேயே நீதிக்கான வழிமுறைகளிலே ஈடுபட்டவர்களுள் அநேகர், மேலதிக நேரம் இருக்கும் பட்சத்திலே வலிமையானதும் பரந்துபட்டதுமான அறிக்கை உருவாகும் என்ற நம்பிக்கையிலே, கடந்த காலக் கடைசிப்பகுதியிலே விசாரணை அணியினருக்கு மேலும் ஆறுமாத அவகாசம் வழங்கும்படி பரிந்துரைத்துவந்தனர். எனவே, செப்டம்பர் மாதத்திலே அறிக்கை வெளியிடப்படும் பட்சத்தில், தாமதம் என்பது நீதியைப்பொறுத்தவரைக்கும் தோல்வியல்ல. உயர் ஸ்தானிகர் தற்போது அந்த அறிக்கை நிச்சயமாகவே வெளியிடப்படும் எனும் தனிப்பட்ட உறுதிமொழியை வழங்கியுள்ளார். இராஜாங்கத் தூதுவராகக் கடமையாற்றிய காலத்திலே நீதிக்காகப் போராடிய நீண்ட தடம்பதித்தவராகவே உயர் ஸ்தானிகர் உள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கதாகும். சர்வதேச குற்றவியல் மன்றத்திலே நீண்டகால ஆதரவாளராக இருந்து, போர்க்குற்றவாளிகளை நீதிக்கு முற்படுத்துவதிலே திடமான நிலைப்பாட்டை எடுப்பவராகப் பரவலாகக் கணிக்கப்பட்ட ஒருவர் அவர். எனவே, அவரது தனிப்பட்ட உறுதிமொழி அதிகக் கனம்பெற்றதாகும்.

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர எழுதிய கடிதமும் முக்கியமானதாகும். இதன் முக்கியத்துவத்துக்கான காரணம், நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி ஐக்கிய அமெரிக்காவும் இலங்கையும் தாமதிக்கச்செய்வதிலே முனைப்புடன் இருக்கையிலே உயர் ஸ்தானிகர் அறிக்கையின் தாமதத்தையிட்டு விருப்பமற்றவராக இருந்தமையேயாகும். இறுதியாக, உயர் ஸ்தானிகரைத் திருப்திப்படுத்தும்படி சில சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும்படியாக ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலதிபர் ஜோன் கெரி இலங்கையின் அவரது சகநிலையினரான மங்கள சமரவீரவுடன் பேசித்தீர்ப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. எனவே, கடிதத்தின் பெரும்பகுதி புதிய அரசால் கொணரப்பட்ட மாற்றங்களிலே நோக்கக்குவியம் கொண்டதாய் இருந்தாலுங்கூட அந்தக் கடிதம் பொறுப்புக்கூறுவதற்கான உள்ளூர் பொறிமுறையொன்றைப் பொறுப்பெடுப்பதாக இலங்கை வாக்குப் பண்ணுவதைத் தெரிவித்து, அந்தப் பொறிமுறையை விருத்திசெய்வதிலே உயர் ஸ்தானிகர் மற்றும் அவரது அலுவலகத்தின் ஆலோசனையும் உதவிகளும் பெறப்படும் என்றும் தெரிவித்தது. சாணக்கியமான முறையிலே வார்த்தைகளைப் பதித்துள்ள இந்தக் கடிதம் பொதுமனிதனுக்கு அர்த்தமற்றதாகத் தென்படக்கூடுமாயினும், அது குறிப்பிடத்தக்க ஒரு சலுகையாகும். அதன் அர்த்தம் என்னவெனில், இலங்கை அரசானது உயர் ஸ்தானிகருடன் இணைந்து நாட்டினுள் ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையை விருத்தியாக்கும் என்பதாகும். எளிமையான அந்த வசனத்தின் மூலமாக மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரும் அவரது நிபுணர்களும் நீதிக்கான இலங்கையின் உள்ளூர் முன்னெடுப்புகளிலே இலங்கை அரசுக்கான ஆலோசகர்கள் எனும் வகிபங்கினைப் பெற்றுள்ளனர். இதனை வேறுவிதமாகக் கூறுவதாயின், இலங்கை அரசானது உயர் ஸ்தானிகரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் பொறுப்புக்கூறும் பொறிமுறையானது மிக உயர்ந்த தராதரம் கொண்டதாகத் திகழும். ஆனால், உயர் ஸ்தானிகரின் ஆலோசனையை அது புறந்தள்ளுமேயாயின், பெப்ரவரி மாதத்திலே வெளியுறவு அமைச்சரின் எழுத்துமூலமான வாக்குறுதி வழங்கப்பட்டிருந்துங்கூட, இலங்கை அரசானது ஒத்துழைக்க மறுத்துள்ளது என செப்டம்பரிலே அறிக்கை வெளியிடப்பட்ட பின்பு உயர் ஸ்தானிகர் தெரிவிப்பது கைகூடும். இராஜாங்க உறவுகள் மண்டலத்திலே எழுத்துமூலமான வாக்குறுதி மீறப்படுவது என்பது மிக மோசமான பின்விளைவுகளைக் கொண்டுள்ள ஒரு விடயமாகும். உண்மையிலேயே இலங்கையைப் பொறுத்தவரைக்கும் பொறுப்புக்கூறுவதற்கான ஐ.நாவின் முழுச் செயற்பாடும் எழுவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் ஜனாதிபதி ராஜபக்‌ஷ வழங்கிய எழுத்துமூல உத்தரவாதம் மீறப்பட்டமையே காரணமாகும். எனவே, அறிக்கை வெளியிடப்படுவதைத் தாமதிக்கச் செய்து காலக்கிரமத்தை பெற்றுக்கொண்டதிலே இலங்கை வெற்றிபெற்றிருந்தாலுமென்ன, அது எழுத்துமூலமான உறுதிமொழியை வழங்கியுள்ளது. அதனைப் புறந்தள்ளுவதை அது கடினமானதாகக் கண்டுகொள்ளும்.

எனவே, நீதிக்கான அண்மித்த காலப்பகுதி நிகழ்வுகளின் தாற்பரியங்கள் என்ன? மற்றும் வரும் மாதங்களிலே நீதியைப் பற்றிய கரிசினை கொண்டவர்களின் செயற்பாட்டு, அணுகுமுறை எப்படியானதாக இருக்கவேண்டும்? என்ற நம்பிக்கையிலே பல சிபார்சுகளை ஆலோசனையாக வழங்குவேன்.

முதலிலே, புதிய அரசு பதவிக்கு வந்ததால் ஏற்பட்டுள்ள இடைவெளியை பயன்படுத்தி, போர்க்குற்றங்கள் மற்றும் மனுக்குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் பற்றிய சாட்சியங்களைத் திரட்டி பயன்படுத்திக்கொள்வது முக்கியமானதாகும். ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அப்படியான சாட்சியங்களைத் திரட்டுவது மிகவும் கடினமானதாக இருந்திருந்தாலுங்கூட, தற்போது சூழ்நிலை ஒரளவுக்கு வேறுபட்டதாகவே உள்ளது. இவ்விடயத்திலே நாம் தவறிப் போய்விடக்கூடாது. விசாரணைகள் பூர்த்தியாகிவிட்டன என்பதுடன் புதிய தகவல்கள் வழங்கப்படமுடியாது எனும் தப்பான ஒரு கருதுகோள் இன்று தமிழர் வட்டகைகளிலே பரவிவருகிறது. இது முற்றும் முழுவதுமாக உண்மையல்ல. விசாரணை தொடர்வதுடன் மார்ச் கடைசிப்பகுதி அல்லது ஏப்ரல் 2015 இலே – மனித உரிமைகள் பேரவையானது செப்டம்பர் வரைக்கும் அறிக்கையைத் தாமதிப்பதற்கான தீர்மானத்துக்கு அங்கீகாரம் வழங்கும் பட்சத்தில் மேலதிக சாட்சி வழங்குவத்றகு அழைப்பு விடுக்கப்படுவது சாலச்சாத்தியமானதாகும். இந்த வாய்ப்பு தவறவிடப்படக்கூடாததாகும்.

இரண்டாவதாக, தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில் சமூகக் குழுக்களும் உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடலில் ஈடுபடுதல் வேண்டும். இலங்கையிலே பொறுப்புக்கூறும் பொறிமுறையை விருத்தியாக்குவதிலே பாதிக்கப்பட்டவர்களும் பங்கெடுக்கவேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்தித் தெரிவிக்கவேண்டும். வேறு விதத்திலே கூறுவதாயின், பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறையை விருத்தியாக்கும் பொறுப்பை முழுவதுமாக அரசின் கைகளிலே விட்டுவிடக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது பிரதிநிதிகளும் இந்தப் பொறிமுறையிலே முக்கியமான வகிபங்கை வகிக்கவேண்டும். மேசையண்டையிலே தமக்கான ஒரு இருக்கையைப் பெற்றுக்கொள்வதைக் கோரி நிற்பதிலே, தமிழ் அரசியற் தலைவர்களும் குடிசார் மக்கள் சமூகமும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் சொந்த நிலைப்பாட்டை மீளமைத்துக்கொள்ளவேண்டும். அதன்படி, எந்த நாட்டிலும் இடம்பெறும் எந்த ஒரு பொறுப்புக்கூறும் செயற்பாடும் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கியதான அகன்றுபட்ட குழுவாக இருக்கவேண்டும் எனும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் சொந்த உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மீள வலியுறுத்திடவேண்டும்.

மூன்றாவதாக, முற்றும் முழுவதுமான உள்ளூர் பொறிமுறை ஏற்புடையதல்ல என்பதை நாம் உணரும் அதேவேளை, முற்றும் முழுவதுமான சர்வதேசப் பொறிமுறையை ஸ்தாபிப்பது என்பதுவும் நடைமுறைச்சாத்தியமற்றதாகும் என்பதையும் உணர்ந்துகொள்ளல் வேண்டும். முன்னைய கட்டுரைகளிலே நான் எழுதியதைப்போல, இலங்கையின் வழக்கை சர்வதேசக் குற்றவியல் மன்றத்துக்கு முற்படுத்துவது அண்மித்த எதிர்காலத்திலே இடம்பெறச் சாத்தியமற்றதாகும். ராஜபக்‌ஷ ஆட்சியில் இருந்த காலத்திலுங்கூட அது சாத்தியமற்றதாய் இருந்தது. தற்காலத்தில் அது அதைவிடவும் நடைமுறைச் சாத்தியமற்றதாய், அதைப்பற்றிக் கனவு காண்பதும் ஏறத்தாழ இயலாததாவே உள்ளது. எனவே, நீதிக்காக நம்பத்தகுந்த ஒரு பொறிமுறையின் அதிசிறந்த வாய்ப்பானது உள்ளூர் மற்றும் சர்வதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாய் இருக்கும். வேறு விதமாகக் கூறுவதாயின், சர்வதேசமயமாக்கப்பட்ட உள்ளூர் பொறிமுறையே தேவை. அப்படியான நீதிமன்றங்கள் நான் கடமையாற்றிய கம்போடியாவிலும், பொஸ்னியா, கிழக்குத்திமோர், சீராலியோன் மற்றும் அண்மைய காலங்களிலே செனகல் ஆகிய நாடுகளிலே உள்ளன.

எனவே, சர்வதேசக் குற்றங்கள் பற்றிய அறிக்கையை வெளியிடுவதைத் தாமதிப்பது எனும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் தீர்மானமானது பலரை மனத்தாங்கலடையச் செய்திருப்பினுங்கூட, அவரது விளக்கிக்கூறும் கருத்துக்களும், இலங்கை வழங்கியுள்ள சலுகைகளின் தன்மையும் உற்சாகமூட்டுவதாகவே உள்ளன. சுருங்கக்கூறின், அறிக்கையை வலுவூட்டும்படி புதிய சான்றுகளை முற்படுத்துவதற்கான மேலதிக வாய்ப்பும் கிட்டியுள்ளது. அது மட்டுமன்றி, உயர் ஸ்தானிகரின் ஆலோசனைகள் மற்றும் உதவிகளைப் பெற்றுக்கொள்ள நாடுவதாக இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ளமையினூடாக, இலங்கைக்குள் நீதிக்கான பொறிமுறையை சர்வதேசமயப்படுத்தும் கதவு திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கு நீதிக்காகப் போராடுவோர் தொழிற்திறனுடன் செயற்பட்டு, சான்றுகளைத் திரட்டி, வரும் மாதங்களிலே உயர் ஸ்தானிகருடனும் இலங்கை அரசுடனும் இராஜ்யத்தூதுவச் சாணக்கியத்துடன் பேச்சு வார்த்தைகளிலே ஈடுபட்டு சர்வதேசமயப்படுத்தப்பட்ட உள்ளூர் பொறிமுறையைக் கலந்தாலோசித்து நிலைநாட்ட முயலவேண்டும்.

நிறான் அங்கிற்றல்

Published in Tamil
Page 1 of 2